Skip to main content

அரசியல் பிரமுகரை விரட்டி விரட்டி கொலை செய்த கூலிப்படை – வாணியம்பாடியில் பரபரப்பு

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

g

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரில் வசிப்பவர் வசீம் அக்ரம். வாணியம்பாடியில் சமூகநல ஆர்வலராக இருந்தவர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளராகவும் இருந்துவந்தார். அக்டோபர் 10ஆம் தேதி இரவு 6.50 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் அவரை அவரது அலுவலகத்தில் இருந்து துரத்திவந்துள்ளனர். சாலையில் ஓட ஓட விரட்டிய 6 பேர் கொண்ட கும்பல், சிலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சரமாரியாக வெட்டினர். அந்தக் கும்பலுக்குப் பாதுகாப்பாக விலை உயர்ந்த இன்னோவா கார் பின்னாடியே வந்தது. அவர்கள் வெட்டி முடித்த பின் அவர்களை ஏற்றிக்கொண்டு அந்தக் கார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. வெட்டிய 6 பேரும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர்.

 

இந்த தகவலைக் கேள்விப்பட்டு வாணியம்பாடி நகர மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். படுகொலை குறித்த தகவல் காவல்துறைக்கு சொல்லப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொல்லப்பட்டவர் உடல் கைப்பற்றப்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கொலைகாரர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை சம்பவத்தைக் கேள்விப்பட்டு முன்னாள் அமைச்சரான நிலோபர் கபில் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? இன்னோவா காரில் வந்து பக்காவாக ப்ளான் செய்து கொலை செய்தார்கள் என்றால், இதன் பின்னால் மிகப்பெரிய ஆட்கள் இருக்க வாய்ப்புள்ளது என சந்தேகிக்கும் காவல்துறை, தீவிரமாக விசாரணை நடத்திவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்