Political parties demand to hold elections in Tamil Nadu in single phase

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

Advertisment

அந்த வகையில் இரண்டு நாள் பயணமாகச் சென்னை வந்துள்ள இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் மூத்த தேர்தல் ஆணைய அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பான ஆய்வுக் கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு, தமிழகத்தின் அனைத்து மாவட்ட மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், காவல்துறை தலைவர்கள், காவல்துறை மற்றும் துணைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisment

இந்நிலையில் தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “2 நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். தமிழகத்தில் மொத்தம் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதன்படி ஆண்கள் 3.04 கோடி பேரும், பெண்கள் 3.15 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8,294 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். புதிய வாக்காளர் 9.18 லட்சம் பேர் உள்ளனர். வாக்காளர்கள் முழுமையாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் எனவும், தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமெனவும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர். நேர்மையாக தேர்தல் நடத்தப்படும் என அரசியல் கட்சியினரிடம் உறுதி அளித்துள்ளோம். பணப்பட்டுவாடாவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், அதனை பொறுத்துக்கொள்ளவும் மாட்டோம் எனவும் தெரிவித்தோம். மேலும் பணப்பட்டுவாடா செய்யும் கட்சியின் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர். தேர்தலில் பணம் பட்டுவாடா, மது விற்பனையை தடுக்க பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் புகார் தெரிவிக்க மொபைல் செயலி உள்ளது. சி - விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கலாம். இந்த செயலியில் பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்காமல் புகார் அளிக்க முடியும். பணப்பட்டுவாடா, மது விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒருதலைப்பட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisment

தமிழ்நாட்டில் 68 ஆயிரத்து 144 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச் சாவடியில் 66 சதவிகிதம் வெப் காஸ்டிங் செய்யப்படும். வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். அதன்படி 17 மாவட்டங்களில் உள்ள 145 எல்லைப் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். ஜனநாயக முறையில் வெளிப்படையாக தேர்தலை நடத்த ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. விமான நிலையங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படும். பதற்றமான தொகுதிகள் கண்டறியப்பட்டு துணை ராணுவப் படைகள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பலருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் அதனை கண்காணிக்கும் வசதி உள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு கடந்த முறை வழங்கிய சின்னமே இந்த முறையும் வழங்கப்படும் என உறுதி அளிக்க முடியாது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் சின்னம் மாறுதலுக்குரியது தான். தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தல் என்ற கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.