சட்டவிரோத பேனர்கள் வைக்க மாட்டோம் என திமுக மற்றும் அதிமுக தவிர மற்ற அரசியல் கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கு உள்ளிட்ட வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று (27/01/2020) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Advertisment

political parties banner related affidavit chennai high court raised question

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு பிளீடர், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், சுபஸ்ரீ வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, சுபஸ்ரீ சம்பவத்துக்கு முன் சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் நிலை என்ன என்பதை அறிக்கையாகத் தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisment

அதுபோல, அரசியல் கட்சியினர் பேனர் வைக்கக்கூடாது என தொண்டர்களுக்கு அறிவுறுத்திய பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவின்படி திமுக மற்றும் அதிமுக கட்சி சார்பில்தான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிற கட்சிகள் ஏன் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினார். பின்னர், அரசு செலவில் லட்சக்கணக்கான ரூபாய் விளம்பரங்களுக்காகச் செலவிடுவது தொடர்பான வழக்கில், பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பது தொடர்பான கொள்கை ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளதா என பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சட்டவிதிகளைப் பின்பற்றி பேனர்கள் வைக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களின் மீது முடிவெடுப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால், மாநகராட்சி துணை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.

பின்னர், இந்த அனைத்து வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள், பிப்ரவரி 27- ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.