A political figure who broke up the anti-liquor awareness meeting

Advertisment

வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை ஒழித்திட மாவட்ட காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கள்ளச்சாராய வியாபாரிகள், உற்பத்தியாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பேர்ணாம்பட்டு அடுத்த சாதகர் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்து கடந்த மாதம் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் எஸ்பி மணிவண்ணன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சாத்கர் மலைப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சாராய ஊரல்கள் மற்றும் கள்ளச்சாராயத்தை அழித்தனர்.

கடந்த 3 மாதங்களில் 30க்கும் மேற்பட்ட கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இன்று (13.07.2023) பேர்ணாம்பட்டு அருகே சாத்கர் கிராமத்தில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 25 கிராம மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சி பிரமுகர் உட்பட சிலர்கூட்டம் நடந்த இடத்திற்கு வந்து காவல் துறையினரை நோக்கி, “எதுக்கு கூட்டம் நடத்த வர்றீங்க.தொடர்ந்து பொய் வழக்கு போடுறீங்க.குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது பண்ணியிருக்கீங்க” என கூறியும் கூட்டத்திற்கு வந்திருந்த கிராம மக்களை விரட்டியும் கூட்டத்தை கலைத்தனர்.

இதனால் விழிப்புணர்வு கூட்டம் நடைபெறாமல் காவல் துறையினர் கூட்டத்தை ரத்து செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.