
சேலத்தில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட காவலருக்கு சக காவலர் குடும்பத்தினர் அட்வைஸ் செய்ததால், ஆத்திரம் அடைந்த அவர் காஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்து விடுவேன் என மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அன்னதானப்பட்டி லைன்மேட்டில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்கள் வசிக்கின்றனர்.இதே குடியிருப்பில் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் மகேந்திரன் என்பவரும் வசிக்கிறார்.
மகேந்திரனுக்கு, மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். அவருடைய குடிப்பழக்கத்தால், மனைவி கோபித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். இந்நிலையில், புதன்கிழமை (ஏப். 13) இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், சத்தம் போட்டு தனக்குத்தானே ஆபாச வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தார். இதை சகிக்க முடியாத அக்கம்பக்கத்தினர் அவரை கண்டித்துள்ளனர்.
பலரும் அவரை கண்டித்ததாலும், அட்வைஸ் செய்ததாலும் ஆத்திரம் அடைந்த மகேந்திரன், இதற்கு மேலும் யாராவது திட்டினாலோ, தனக்கு அட்வைஸ் செயதாலோ காஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்து விடுவேன் என்று மிரட்டியபடியே தனது வீட்டுக்குள் ஓடினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவலர் குடும்பத்தினர், இதுகுறித்து உடனடியாக மாநகர காவல்துறை ஆணையருக்கு தகவல் அளித்தனர்.
இந்த குடியிருப்புக்கு எதிரில்தான் காவல்துறை ஆணையர் அலுவலகம் இருக்கிறது. அதனால் தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
காவல்துறையினர், மகேந்திரனை பிடித்து அறிவுரை கூறினர். அவரை தனியாக விட்டால் ஏடாகூடமாக ஏதேனும் செய்து விடுவார் எனக்கருதிய காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். குடிபோதை எஸ்எஸ்ஐயின் மிரட்டலால் சம்பவத்தன்று இரவு காவலர் குடியிருப்பில் அனைத்து குடும்பத்தினரும் தூக்கம் தொலைத்தனர். இந்த சம்பவம் காவலர் குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)