/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/8_146.jpg)
கடந்த ஆண்டு அக்.4 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு சுற்றுலா தளத்தில் நின்றுகொண்டிருந்த 17 வயது சிறுமியை காரில் ஏற்றி 4 காவலர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர். இது தொடர்பாக சிறுமி ஜீயபுரம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர் பிரசாத், முதல்நிலை காவலர் சங்கர ராஜா பாண்டியன், காவலர் சித்தார்த்தன் ஆகிய 4 பேர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 4 பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட 4 பேரும் 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர். இது குறித்து நக்கீரன் செய்தி வெளியிட்டது. இருப்பினும் அவர்கள் குற்ற நடவடிக்கைகளைக் கைவிடவில்லை.
இந்த நிலையில்தான், ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு இருவர் கஞ்சா கடத்தி வருவதாக மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்படைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பலூர் செக்போஸ்டில் காரை தனிப்படையினர் மடக்கிப் பிடித்தனர். பின்பு காரை சோதனையிட்ட போது, அதில் மொத்தம் 4 மூட்டைகளில் 117 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப் பறிமுதல் செய்த போலீசார், கடத்தி வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே இருக்கும் முதல் நிலை காவலரான சங்கர ராஜா பாண்டியன் என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் அவருடைய உறவினரும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவலர்களே இப்படித் தொடர்ந்து பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது முகம் சுழிக்க வைக்கிறது. அதே சமயம் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தும் போக்சோவில் சிறைக்குச் சென்ற காவலர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)