/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gcp-help-art.jpg)
சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் இரண்டாம் நிலைக் காவலரான விக்னேஷ் பாண்டி என்பவர் காசிமேடு காவல் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20 ஆம் தேதி மாலை (20.02.2024) மாலை சுமார் 06.30 மணியளவில் காசிமேடு எஸ். என்.செட்டி ரோட்டில் காவல் வாகனத்தில் ரோந்து பணியில் இருந்துள்ளார்.
அச்சமயம் அவ்வழியே நடந்து சென்ற நபர் மீது ஒரு ஆட்டோ மோதியதில் அந்த நபர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனைக் கண்ட காவலர் விக்னேஷ் பாண்டி சுயநினைவின்றி கீழே விழுந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். இதனால் அவருக்குசுயநினைவு திரும்பியது. அதன் பின்னர் தன்னுடன் பணியில் இருந்த காவலர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவருக்கு குடிநீர் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர் விக்னேஷ் பாண்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விபத்தில் சிக்கியவருக்கு சி.பி.ஆர். மற்றும் முதலுதவி கொடுத்து ஒரு உயிரைக் காப்பாற்றிய இரண்டாம் நிலை காவலர் விக்னேஷ் பாண்டிக்கு ஒரு பெரிய சல்யூட். காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், காவலர் விக்னேஷ் பாண்டியின் வீரச் செயலைப் பாராட்டினார். விக்னேஷ் பாண்டி உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)