policeman violated the woman who came to complain

திருமழிசை அடுத்த பிராயம்பத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(31). இவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்திக் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணை அழைத்து வந்து காட்டுப்பாக்கம் செந்தூர்புரத்தில் தனியாக அறை எடுத்து 3 வருடங்களாகக் கணவன் மனைவி போன்று இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கார்த்திக் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்ததால் இந்தப் பெண் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு கார்த்திகை மீட்பதற்காக வந்துள்ளார்.

அப்போது வெள்ளவேடு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் பணி புரியும் தலைமை காவலர் ஏசுதாஸ் என்பவர் அந்தப் பெண்ணிடம் உனது ஆண் நண்பர் சீக்கிரமாக வெளியே வரவேண்டும் என்றால், அவர் மீது மேலும் வழக்கு பிரிவுகள் பதிவு செய்யாமல் இருப்பதற்கு தனக்கு நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கார்த்திக் சிறையில் இருக்கும் வேலையில் தலைமை காவலர் ஏசுதாஸ் அந்த பெண்ணுடன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்கள் சிறையிலிருந்து கார்த்திக் பிணையில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. கார்த்திக் பிணையில் வெளியே வந்த பின்னரும் கார்த்திக்கு தெரியாமல் அவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தலைமை காவலர் அந்தப் பெண்ணிடம் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு காவலர் ஏசுதாஸ் கார்த்திக் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிற்கும் போலீசார் ஏசுதாஸுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்பு அந்த பெண்ணை தலைமை காவலர் ஏசுதாஸ் தாக்கியதாகக் கூறப்படுகிறது. வீடு புகுந்து போலீசார் ஏசுதாஸ் தன்னை தாக்கியதாக கார்த்திக்கிடம் அந்த பெண் செல்போன் மூலமாக தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த கார்த்திக் அங்கிருந்த தலைமை காவலர் ஏசுதாஸை தாக்கியுள்ளார்.

காயமடைந்த ஏசுதாஸ் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி திருமழிசையில் உள்ள கார்த்தியின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த வெள்ளவேடு காவல்நிலைய காவலர்கள் இயேசுதாஸ், சரத், தாஸ் உள்ளிட்ட சுமார் 10 பேர் கொண்ட போலீசார் கார்த்தியை மறைவான ஓர் தனி இடத்திற்கு கூட்டிச் சென்று சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் பலத்த காயம் அடைந்த கார்த்தியை அங்கிருந்து அழைத்து வந்து பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். காவலரை தாக்கியதாக கார்த்தி மீது வழக்குப் பதிவு செய்த பூவிருந்தவல்லி போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில் நீதிபதியிடம் கார்த்திக் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து கார்த்திக்கை நீதிபதி பிணையில் விடுவித்துள்ளார். மேலும் வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலர் ஏசுதாஸ் ஆவடி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

ஆனால் கார்த்திகை கடத்திச் சென்று தாக்கிய தலைமை காவலருக்கு உதவிக்கு வந்த 10 போலீசார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் பாதுகாத்து வைத்திருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டுமென பாதிக்கப்பட்ட கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டத்தைக் காக்க வேண்டிய காவலர்களே சட்டத்துக்குப் புறம்பாக நடந்திருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.