Policeman suspended for posting against DMK

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிரான கடுமையான கருத்துக்களை பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், வேலூர் மாவட்டம் வேலூர் கிராமிய காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் அன்பரசன் என்பவர் அவருடைய முகநூல் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் வகையில் கமெண்ட் பாக்சில் கருத்தைப் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த வேலூர் மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் விசாரணை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் அன்பரசனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில் "முகநூல் பக்கத்தில் திமுக அரசுக்கு எதிராக காவலர் அன்பரசன் கருத்து பதிவு செய்துள்ளார். இது சீருடை பணியாளர்கள் விதிகளுக்கு எதிரானது. அதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டது. முகநூல் பக்கத்திலிருந்த அவரது கருத்து நீக்கப்பட்டதுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கின்றனர்.