வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் நேற்று முன் தினம் (25-07-24) இரவு, இரண்டாம் நிலை காவலர் சங்கர் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நவீன் ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அவர்கள் வாகன ஓட்டிகளிடம் கையூட்டு பெற்றுள்ளனர். மேலும், பணம் தராத சில வாகன ஓட்டிகளை கடுமையாக பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சியடைந்த பொதுமக்களில் ஒருவர், அவர்கள் கையூட்டு பெறுவதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ, சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதனையடுத்து, வாட்ஸ் அப்பில் வந்த வீடியோ காட்சியை அடிப்படையாக வைத்து இருவரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டார். காவல்துறையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, விசாரணைக்கு சங்கரை உட்படுத்தியுள்ளனர். அதேபோல் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஊர்க்காவல் படையிலிருந்து விலகிக் கொள்ளப்படுவார்கள் என கூறப்படுகிறது.