/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tpt-police-arumugam-art.jpg)
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன். இவரது மகன் ஆறுமுகம். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். மே 9 ஆம் தேரி ஏலரைபட்டி கிராமத்திலிருந்து பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனமான ஹோண்டா சைனில் பெங்களூரு டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது காட்பாடியில் இருந்து டிவிஎஸ் கம்பெனிக்கு உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு டாடா ஏசி வாகனம் ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அந்த வாகனம் திடீரென ஆறுமுகம் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் தூக்கி எறியப்பட்டுள்ளார்.
இந்த விபத்தை ஏற்படுத்திய டாட்டா ஏசி வாகன ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதல் நிலைக் காவலர் ஆறுமுகத்தின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டாட்டா ஏசி வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர். பணி முடித்துவிட்டு வரும் வழியில் முதல் நிலை காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-sad-art_5.jpg)
இந்நிலையில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல்களை தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, ஏலரப்பட்டி பகுதி அருகே நேற்று (09.05.2024) பிற்பகல் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்து வருபவர் காவலர் ஆறுமுகம் (வயது 43). இவர் வாணியம்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது போது எதிரில் பெங்களூர் நோக்கி வந்துகொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் காவலர் திரு. ஆறுமுகம் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத்துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.
இவ்விபத்தில் காவலர் ஆறுமுகம் உயிரிழந்துள்ளது தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்துவரும் காவலர் ஆறுமுகத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)