police who dragged the people by speaking obscenities

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தண்டல கிருஷ்ணாபுரம் பாலாற்றில் நேற்று (25.08.2024) குளிக்கச்சென்ற முள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர் பள்ளத்தினுள் தேங்கியிருந்த நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவரது உயிரிழப்புக்கு காரணம் அப்பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையே எனக் கூறி அப்பகுதி மக்கள் நேற்று போராட்டம் நடத்தி லாரியின் கண்ணாடியை உடைத்தனர். மேலும் மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று லாரியை உடைத்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்ய வந்தபோது அங்குள்ள பெண்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்துள்ளனர். ஆனால் அதனையும் மீறிக் காவல் துறையினர் இளைஞர்களைத் தாக்கி அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இன்றும் அப்பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்துப் போராடியவர்களையே காவல்துறையினர் அடித்து கொச்சையாகத் திட்டி இழுத்துச் சென்றதால் பொதுமக்கள் மிகுந்த ஆதங்கம் தெரிவித்ததோடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.