Police who acted quickly before firefighters arrived

Advertisment

திருச்சி பொன்மலைப்பட்டி திருநகர் மாவடிகுளம் அருகே தனியார் இடத்தில் உள்ள ஒரு திறந்த கிணற்றில், பெண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருவெறும்பூர் போலீசார் அங்கு சென்று விசாரணையை தொடங்கிய நிலையில் இது குறித்து திருவெறும்பூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

ஆனால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு காலதாமதம் ஆனதை தொடர்ந்து, திருவெறும்பூர் போலீசாரே பொதுமக்கள் உதவியுடன் பிணத்தை மீட்க முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சதுர வடிவில் மரக்கட்டைகளால் ஆன வலை தயாரிக்கப்பட்டது. கயிறு உதவியுடன் அதனைத் தண்ணீரில் வீசி அதன் மூலமாக பெண் பிணத்தை தண்ணீரில் இருந்து தரைக்குக் கொண்டு வந்தனர்.

அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தது பொன்னேரிபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி பரமேஸ்வரி(40) என்பது தொியவந்தது. இவர்களுக்கு சுதர்சன்(16) என்கிற மகன் உள்ளார். பரமேஸ்வரிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், பரமேஸ்வரி தவறி அந்த திறந்த கிணற்றில் விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் தள்ளி விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.