Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

இலங்கை அகதி மீது போலீசார் சரமாரி தாக்குதல்! முகாமில் தங்கிய மர்ம நபர்கள் யார்?

indiraprojects-large indiraprojects-mobile
sara

 

சேலம் அருகே, இலங்கை அகதியை போலீசார் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. ஈழத்தில், கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கும் போர் மூண்டதால், அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் வாழ்வாதாரம் தேடி தமிழ்நாட்டிற்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். 


இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர், நாகியம்பட்டி முகாமிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கியூ பிராஞ்ச் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த முகாமில் அகதிகளைத் தவிர வெளிநபர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நாகியம்பட்டி முகாமில் வசிக்கும் ஜான் என்பவரின் வீட்டில் தங்கி உள்ளனர். அவர்கள் தங்கியிருப்பது தொடர்பாக முகாமைச் சேர்ந்த சிமியோன் (68) என்பவருக்கும், சுபாஷ்கரன் (58) என்பவருக்கும் நேற்று முன்தினம் (அக்டோபர் 9, 2018) தகராறு ஏற்பட்டது. நேற்றும் அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து சிமியோன் அளித்த தகவலின்பேரில் தம்மம்பட்டி போலீசார் அந்த முகாமுக்கு விரைந்தனர். அப்போது போலீசாரிடமும் சுபாஷ்கரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த போலீசார், திடீரென்று சுபாஷ்கரனை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். 


பலத்த காயம் அடைந்த சுபாஷ்கரன், இன்று மதியம் 2 மணியளவில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருடைய மூக்கு, நெற்றி, முதுகு பகுதிகளில் காயங்கள் கன்றிப்போய் இருந்தன. 


இதுபற்றி நாம் சுபாஷ்கரனிடம் பேசினோம்.


''கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த இரண்டு பேர், நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள நாகராஜா என்கிற ஜான் வீட்டில் மூன்று மாதமாக தங்கி உள்ளனர். எங்கள் முகாமில் வசிக்கும் சிமியோன் அங்கிள் என்பவர், கடலூர் வாலிபர்கள் இருவரையும் பார்த்து, 'நீங்கள் என்ன தீவிரவாதிகளா? நீங்கள் யார்? ஏதோ பெண்கள் விவகாரத்தில் தப்பு செய்துட்டு இங்கே வந்து ஒளிந்திருக்கிறீர்கள்' என்று சொன்னார்.


இதையறிந்த நான் சிமியோன் அங்கிளிடம் சென்று, நீங்கள் ஏன் அவர்களை மிரட்டுகிறீர்கள். போலீசுக்கு தகவல் சொன்னால் அவர்கள் வந்து பார்த்துக்கொள்வார்கள் என்று சொன்னேன். உடனே அவர், நீ யார் அதைக் கேட்க? என்று சொல்லி என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். பதிலுக்கு நானும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினேன்.


இதுபற்றி தகவல் தெரிந்த தம்மம்பட்டி போலீசார் அங்கே வந்தனர். அவர்கள் வந்த வேகத்தில் என்னிடம் என்ன ஏது என்றுகூட விசாரிக்காமலேயே சரமாரியாக அடிக்கத் தொடங்கி விட்டனர். ஃபைபர் லத்தியால் அடித்தனர். அப்போது நான் அணிந்திருந்த கைலி கழன்று கீழே விழுந்தது. பலர் முன்னிலையில், கைலி அவிழ்ந்து, நான் ஜட்டியோடு இருக்கும்போதும் போலீசார் என்னை அடித்தனர். இந்த சம்பவம் அக்டோபர் 10ம் தேதி காலை 11 மணியளவில் நடந்தது.  பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றும் அடித்தனர்.


மூன்று போலீசார் என்னை தாக்கினர். அப்போது அவர்கள், 'ஏன்டா பொறம்போக்கு நாயே. எங்களிடம் பிச்சை எடுக்கற அகதி நாயே...அடிச்சே சாகடிச்சிடுவோம்,' என்று சொல்லி அடித்தனர். பின்னர் சிமியோன் அங்கிள், 'நாங்கள் ஒற்றுமையாக செல்கிறோம்' என்று எழுதிக் கொடுத்தார். அதில் என்னிடமும் போலீசார் கையெழுத்து வாங்கிக்கொண்டு நேற்று இரவு 8 மணியளவில் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். போலீசார் தாக்கியதில் என்னால் மூச்செடுக்க முடியவில்லை. நெஞ்சுவலியும் வந்தது. அதன்பிறகு என் நண்பர் சோலை செல்வம் என்பவர், என்னை இன்று ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்,'' என்றார்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் செல்வம், ராஜலிங்கம், சசிகுமார் ஆகியோரும் சுபாஷ்கரனை மருத்துவமனையில் சேர்த்ததில் முக்கிய பங்காற்றியதாகச் சொன்னார்கள். அகதியை தாக்கிய போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் த.வா.க. மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம்.


இதுபற்றி நாம் நாகியம்பட்டி அகதிகள் முகாமைச் சேர்ந்த சிமியோன், முகாம் தலைவர் ஜோதி ஆகியோரிடமும் விசாரித்தோம். 


சிமியோன் கூறுகையில், ''ஜான் வீட்டில் கடலூரைச் சேர்ந்த இரண்டு பொடியன்கள் தங்கியிருக்கின்றனர். உண்மையில் அவர்கள் பெயர்கள்கூட தெரியாது. முகாமில் வெளி ஆள்கள் தங்கக்கூடாது என்று ஏற்கனவே கியூ பிராஞ்ச் போலீசாரிடம் நானும், முகாம் தலைவர் ஜோதியும் புகார் அளித்திருக்கிறோம்.


அதனால் நேற்று முன்தினம் அந்த இரண்டு பொடியன்களையும் முகாமை விட்டு வெளியேறும்படி சொன்னோம். ஊருக்குச் செல்ல காசு இல்லாததால் முகாம் ஆள்களுடன் பெயின்ட் அடிக்கும் வேலைக்கு சில நாள்கள் சென்றனர். இந்த நிலையில்தான், சுபாஷ்கரன் குடிபோதையில் வந்து, நான்தான் அவர்களை தங்க வைத்திருக்கிறேன் என்று கூறி எங்களிடம் தகராறு செய்தார். விசாரணைக்கு வந்த போலீசாரிடமும் தகராறு செய்ததார். 


பிறகு, நேற்று இரவே போலீஸ் நிலையத்தில் இருந்து அவரை விட்டுவிடும்படி சமாதான கடிதம் எழுதிக்கொடுத்தோம். திடீரென்று இன்று அவர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்திருப்பது ஏன் என்று தெரியவில்லை,'' என்றார். 


இதுகுறித்து ஆத்தூர் டிஎஸ்பி பொன்கார்த்திக் குமாரிடம் கேட்டபோது, ''சுபாஷ்கரன் என்பவர் முகாமில் ஒருவரை அடிக்கப் போனார். அதுகுறித்து விசாரிப்பதற்காக தம்மம்பட்டி போலீசார் அ-ழைத்துச்சென்றனர். விஷயம் அவ்வளவுதான். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக்கட்சியினரின் தூண்டுதலால் சுபாஷ்கரன் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்,'' என்று முடித்துக்கொண்டார்.


எது எப்படியோ, தமிழகத்தை நம்பி வந்த அகதி ஒருவர் தாக்கப்பட்டதாக புகார் சொல்கிறார். அதுகுறித்து விசாரித்து உண்மையை அறிய வேண்டிய காவல்துறையினரே பட்டும்படாமல் பேசுவது தகுமா?

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...