/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_220.jpg)
தருமபுரி மாவட்டம், தருமபுரி சேலம் பிரதான சாலையில் அமைந்துள்ளது தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இந்த மருத்துவமனை தினமும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் எனத் தினந்தோறும் 1000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மக்கள் கூட்டம் அதிகமென்பதால், இங்குப் புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு, காவல் நிலையத்தில் காவலர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த மருத்துவமனை முன்பு உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நோயாளிகளைப் பார்க்கவரும் உறவினர்கள், சில மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இந்த உணவகத்தில் உணவு சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.
அப்படித்தான், புறக் காவல் நிலையத்தில் பணியாற்றும் சில காவலர்கள் இங்கு உணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காவேரி என்பவர், தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள உணவகத்தில் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். ஆனால் சாப்பிட்டுவிட்டு, அதற்கான பணத்தைக் கொடுக்காமல், கையில் இருக்கும் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் எனக் கூறி, பாக்கி வைத்துச் செல்வதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் சாப்பிட்ட உணவுக்கு வழக்கம்போல பாக்கித் தொகை வைத்துள்ளார். இதனால், நேற்று மாலை சாப்பிட வந்தவரிடம் அந்த உணவாக உரிமையாளர் முத்தமிழ் என்பவர் பாக்கித் தொகை கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த எஸ்.எஸ்.ஐ.காவேரி, கடும் ஆவேசமடைந்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், காவேரி தனது காலில் அணிந்திருந்த ஷூ வை கழட்டி முத்தமிழை அடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தடுத்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
உணவகத்தில் உணவு அருந்திவிட்டு பணம் கொடுக்கும் பொழுது ஏற்பட்ட தகராறில் எஸ்.எஸ்.ஐ.காவேரி, உணவக உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் பணத்தை வீசியெறிந்த எஸ்.எஸ்.ஐ காவேரி, முத்தமிழுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஷூவை கழற்றி, உணவக உரிமையாளரைத் தாக்க முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள், ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவலர் சீருடையில், இருக்கும் ஒருவர், ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்து, பணத்தை வீசிவிட்டு, காலில் இருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் முத்தமிழ் கூறியதாவது, "தினமும்எஸ்.எஸ்.ஐ.காவேரி, தங்களது ஓட்டலில் வந்து சாப்பிட்டுவிட்டு முழுப் பணத்தையும் கொடுப்பதில்லை. நாளை தருவதாகச் சொல்லிவிட்டு மீதி வைத்துவிட்டுச் சென்று விடுவார். ஆனால் அடுத்த நாள் அந்த பாக்கித் தொகையைத் தரமாட்டார். காவல் துறையிடம் பகைத்துக் கொண்டால், தொழில் செய்ய முடியாது என்பதால், பெரியதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். ஆனால், இப்படியே போனால், தொழில் செய்யமுடியாது என்பதால் அவரிடம் பாக்கித் தொகையைக் கேட்டோம். அதற்கு அவர் கடும் ஆவேசத்தில் மிரட்டி ஷூவை எடுத்து அடிக்க வந்துவிட்டார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க இருக்கிறோம்" என்றார் உணவகத்தின் உரிமையாளர் முத்தமிழ்.
இதனை அடுத்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவின் பெயரில், நகர காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் எஸ்.எஸ்.ஐ காவேரி உணவகத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், எஸ் எஸ் ஐ காவேரியை தற்காலிக பணியிட இயக்கம் செய்து உத்தரவிட்டார். உணவகத்தில் தகாத முறையில் நடந்து கொண்ட எஸ்.எஸ்.ஐ. மீது உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்தது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)