/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/salem3_16.jpg)
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த உதவி ஆய்வாளர்கள் பணிக்கான எழுத்து தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால், மறுதேர்வு நடத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் எழுத்து தேர்வு நடைபெற்றது. சுமார் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த எழுத்து தேர்வில், 5,275 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக, கடந்த மார்ச் மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த எழுத்து தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் காப்பியடித்து தேர்ச்சி பெற்றுள்ளதால், தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி, டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், பொதுப் பிரிவு மற்றும் காவல்துறையினருக்கான தனிப்பிரிவு என இரண்டு பிரிவுகளிலும் முறைகேடு நடந்துள்ளது. அதில், குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதி ஒன்றன் பின் ஒன்றாக வரிசை எண் கொண்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வெழுதும் நபர்கள் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரே இடத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு வரிசை எண்கள் ஒன்றன்பின் ஒன்றாக வடிவமைக்கப்பட்டு, அவர்கள் காப்பியடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பயிற்சி மையங்களும் இந்த முறைகேட்டில் உடந்தையாக செயல்பட்டுள்ளன.
தேர்வு அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. தேர்வின்போது செல்போன்கள் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு, சீருடை பணியாளர் தேர்வாணையம், மற்றும் டி.ஜி.பி ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)