
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த 2 புனிதத் தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் எனத் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி கடந்த 4ஆம் தேதி (04.02.2025) போராட்டம் நடத்த உள்ளதாக இந்து அமைப்பினர் அறிவித்ததிருந்தனர். இந்த போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இத்தகைய சூழலில் தான் மதுரை மாவட்ட ஆட்சியர், 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனால் தடையை மீறி வெளி மாவட்டங்களில் இருந்து வந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்து அமைப்பினர் சார்பில் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கில் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்பட்டு பழங்காநத்தம் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். உள்ளூர்ப் பகுதி மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றாலும் பல்வேறு பகுதிகளில் இருந்து அங்கு வந்திருந்த இந்து அமைப்பினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்திய மாணவர்கள் சங்கம், அகில இந்திய மாதர் சங்கம், அகில இந்திய வாலிபர் சங்கம், முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், ‘திருப்பரங்குன்றத்தின் பெருமையைக் காப்போம். மத பிரச்சனையை ஒழிப்போம். பல நூறு ஆண்டுகளாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வழிப்பட்டு வருகின்றனர். எனவே மத ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ எனக் கூறி துண்டறிக்கை அச்சிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த துண்டறிக்கைகள் இன்று (18.02.2025) திருப்பரங்குன்றத்தின் பகுதியில் விநியோகிக்கப்பட்டது.

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் துண்டறிக்கையை விநியோகம் செய்தவர்களை எச்சரிக்கை செய்தனர். மேலும் உரிய அனுமதி பெற்று துண்டறிக்கையை விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதனால் காவல் துறை மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதன காரணமாக அப்பகுதியில் சிறிதி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.