police stations cctv tamilnadu government chennai high court

Advertisment

காவல் நிலையங்களில் சிசிடிவியில் பதிவாகும் காட்சிகளை, காவல்துறையினர் கையாள முடியாத வகையில், அவற்றைபாதுகாத்து வைப்பதற்கான திட்டத்தை வகுக்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பாலவாக்கத்தைசேர்ந்த நிஜாமுதீன் என்பவர் தொடர்ந்த வழக்கில்,விசாரணைக் கைதிகள் காவல்நிலையத்திற்குள் கடுமையாகதாக்கப்படுவது, தங்கள் அதிகாரத்தை மீறி காவல்துறையினர் செயல்படுவது என மனித உரிமை மீறல்கள் காவல்நிலையங்களில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுப்பதற்கு காவல்நிலையங்கள் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது அவசியமாகும். மேலும், காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தபடுவதால், விசாரணைக்கு அழைத்துசென்றவர்கள் தாக்கப்படுவதும், லாக் அப் மரணங்கள் தடுக்கப்படுவதற்கும், அது தொடர்பான விசாரணைக்கும் மிக முக்கிய ஆதாரமாக இருக்கும்.

நீதிமன்றம் சிசிடிவி கேமராக்களை காவல்நிலையங்களில் பொருத்த உத்தரவிட்டும், தமிழகத்தில் காவல்நிலையங்களில் முழுமையாக சிசிடிவி பொருத்தப்படவில்லை. பல காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பாரமரிப்பு இல்லாமல் இயங்காத நிலையில் உள்ளன. காவல்நிலையத்திற்குள் நடக்கும் குற்றங்களை மறைக்க, சிசிடிவியை காவல்துறையினர் கையாண்டு, அவர்களுக்கு சாதகமாக, ஆதாரமான காட்சி பதிவுகளை நீக்கி விடுகின்றனர்.

Advertisment

இத்தகைய நடவடிக்கைகள், சாத்தான்குளம் காவல்நிலையத்தில், தந்தையும் மகனும், காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக, வழக்கு விசாரணையில்கூட, காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவியை காவல்துறையினர் கையாண்டதால், ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே, காவல்நிலையங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதோடு, அதை முறையாகபராமரிப்பதற்கும், சிசிடிவியில் பதிவாகும் காட்சிகளை காவல்துறையினர் அழிக்காமல் பாதுகாத்து வைப்பதற்கும், தேவையான திட்டங்களையும், விதிகளையும் உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, நவம்பர் 6- ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.