Skip to main content

சிந்தனை விசாலமாகட்டும்...! – பெண்களுடன் மகளிர் தின விழா கொண்டாடிய போலீஸ் எஸ்.பி.

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

ஒவ்வொரு ஆண்டும் மனித சமூகம் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை இணைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டே வருகிறது. அதில் ஆண், பெண் என்ற பாகுபாடு குறையத் தொடங்கி, எல்லா நிலைகளிலும் சவால் விடும் வகையில் பெண்களின் உழைப்பு கூடியுள்ளது. ஆட்டோ ரிக் ஷா ஓட்டுவது முதல் செயற்கை கோளான ராக்கெட் விடுவது வரை, இன்று பெண் சமூகத்தின் பங்கு அளப்பரியதாக உள்ளது.

 

Police SP celebrated women's day with women

 



அதேபோல் படைப்பாற்றல் துறையிலும் பெண்கள் சிறந்து விளங்கும் சூழல் இப்போது காணமுடிகிறது. முன்பெல்லாம் மகளிர் தினம் என்றால் உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று ஏதோ அரசியல் கட்சியில் உள்ள பெண் நிர்வாகிகள் அல்லது உயர் பொறுப்பில் உள்ள பெண்கள் கொண்டாடினார்கள் என்று செய்திகள் வரும். ஆனால் இப்போது படித்த பெண்கள் மட்டுமில்லாமல் கிராமத்தில் உள்ள பெண்களும் மகளிர் தினம் என்பதை தங்களுக்கான ஒரு பெருமையான நாளாக கொண்டாட தொடங்கியுள்ளார்கள்.

குறிப்பாக இந்த வருடம் அரசுப்பணியில் ஈடுபடும் பெண் ஊழியர்கள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் குடும்பப் பெண்கள் என எல்லோருமே மகளிர் தினத்தின் சிறப்பை கொண்டாடி வருகிறார்கள். இந்தநிலையில் ஈரோடு மாவட்ட காவல்துறை அமைச்சுப் பெண் பணியாளர்கள் மகளிர் தின விழாவை இன்று மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் முன்னிலையில் கொண்டாடினார்கள். இந்த விழாவுக்கு எஸ்பி சக்தி கணேசனின் மனைவியான கீர்த்தனா தேவியும் வந்திருந்தார். அவரது அலுவலகத்தில் கேக் வரவழைக்கப்பட்டு, காவல்துறை அமைச்சு பெண் பணியாளர்களோடு மாவட்ட எஸ் பி, அவரது மனைவியும் கேக் வெட்டினார்கள். 

பிறகு எஸ்பி சக்தி கணேசன் பணியாளர்களிடம் பேசும்போது, "ஆண்களின் வெற்றிக்குப் பின்னால் பெண்கள் இருக்கிறார்கள் என்று கூறுவதுண்டு. ஆனால் இன்று பெண்களின் வெற்றி பெருமளவில் கூடிக்கொண்டு வருகிறது. அரசு ஊழியர்களாக இருந்தாலும், தனியார் துறையில் பணியாற்றினாலும் பெண்களின் உழைப்பு அதில் அவர்கள் செலுத்தும் கவனம் மிகவும் உறுதியானது. இன்று சமூகத்தில் வளர்ந்து வரும் விஞ்ஞானம் ஏராளமாக நமக்கு நல்லதையும் கொடுத்திருக்கிறது. சில தீயதையும் கொடுத்திருக்கிறது.

அப்படி நாம் இந்த மின்னணு சாதனங்களை கையாளும்போது பெண்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என பலவற்றை நாம் நமது தேவைக்காக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதில் சில தவறான பயன்பாடுகளும் உள்நுழைந்து விஷமிகள் திட்டமிட்டு சில கிரிமினல் வேலைகளை செய்து வருகிறார்கள். அதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதேபோல் சம்பந்தமில்லாமல் அறிமுகம் இல்லாமல் உள்ள நபர்களோடு இதுபோன்று மின்னணு சாதனங்களில் தொடர்புகளை வைத்துக் கொள்ளக்கூடாது. பெண்கள் உங்களின் சிந்தனையை விசாலமாக்குங்கள். நீங்கள் பணிபுரியும் தொழிலில் சாதிப்பததோடு நம்மிடம் நேர்மையும் ஒழுக்கமும் நல்ல சிந்தனையும் எளிமையும் முக்கியமாக இருக்க வேண்டும். குறிப்பாக எவ்வளவு பணிகள் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான புத்தகங்களைப் படியுங்கள் படைப்பாற்றல் நற்சிந்தனைகளை தரும். சவாலான பணிகளை ஏற்று நீங்கள் வெற்றி பெறுங்கள். மகாகவி பாரதி கண்ட புதுமை பெண்களாக, புரட்சிப் பெண்களாக உருவாகுங்கள் என இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன்" என கூறினார்.

 

சார்ந்த செய்திகள்