மதுரை மாவட்டம் பாண்டி கோயில் என்ற இடத்தில் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அம்மாநாட்டுத் திடலில் ஜூன் 10ஆம் தேதி முதல் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து ஜூன் 22ஆம் தேதி வரை காலை, மாலை என வழிபாடு நடத்தி பிரசாதம் வழங்க முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மாநாட்டுத் திடலில் ஜூன் மாதம் 10ஆம் தேதி முதல் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து 22ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை இரு வேளைகளில் தினசரி 2 மணி நேரம் பூஜை செய்ய அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்குக் காவல் துறை தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆகவே அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து ஜூன் 22ஆம் தேதி வரை காலை மாலை வழிபாடு செய்து பிரசாதம் வழங்க அனுமதி வழங்கி உத்தரவிடவேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வில் இன்று (09.06.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு திறப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜூன் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர் மாநாட்டிற்கே தற்பொழுது வரை அனுமதி கொடுக்கவில்லை. காரணம் காவல்துறை சார்பில் எழுப்பிய கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். இந்த மாநாட்டில் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும், 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே போதிய பாதுகாப்பு வசதி செய்வதற்குத் தேவையான தகவல்களை வழங்க வேண்டும். இந்த மாநாட்டிற்கு முக்கிய வி.ஐ.பி.கள் யார் யார் வர உள்ளார்கள் என்று தெளிவுபடுத்த வேண்டும்.
சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற ஐ.பி.எல். கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். எனவே இதனைக் கவனத்தில் கொண்டு தேவையான தகவல்களை அளித்தால் 2 நாட்களில் உரிய முடிவை அறிவிக்கப்படும். அதற்கு முன்னதாக செட் அமைப்பதற்கு எவ்வாறு அனுமதி கொடுக்க முடியும். இதற்காக உரியப் பதில் அளிக்க 3 நாட்கள் அனுமதி கொடுக்க தயாராக இருக்கிறோம்” என வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி, “ஒவ்வொரு தனியார் நிகழ்வுக்கும் போலீசார் பாதுகாப்பு கேட்பது தேவையற்ற மனித உழைப்பை வீணடிக்கும் செயலாக உள்ளது. ஏன் இது போன்ற நிகழ்வுகளுக்கு போலீசார் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக முறைப்படி இந்த மனு மீது காவல்துறை உரிய முடிவு எடுக்க வேண்டும்.
எனவே 12ஆம் தேதிக்குள் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். அதன் பிறகு 13ஆம் தேதி செட் அமைக்க அனுமதி கோரிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதே சமயம் காவல்துறையினர் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி வழங்கவில்லை எனில் அந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் செட் அமைக்கும் பணிகளைத் தொடங்கலாம் ஆனால் எவ்வித பூஜைகளும் நடத்தக்கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார்.