/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2_362.jpg)
சிதம்பரம் சுற்று வட்ட பகுதிகளில் போதை புகையிலை பொருட்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர் மத்தியில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் அம்பேத்கருக்கு தகவல்கிடைத்துள்ளது. அதன்பேரில் இவரது தலைமையில் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் மணிகண்டன், ஸ்ரீதர், ரமணி, பிரகாஷ், கஜேந்திரன், புருஷோத் உள்ளிட்டவர்கள் வல்லம்படுகை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருள் விற்பனை குறித்து பெட்டிக் கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது கிடைத்த தகவலின் பெயரில் கடந்த ஒரு வாரமாக இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிதம்பரம் அருகே கடவாச்சேரி பாலம் பகுதியில் புதன்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரி ஒன்று வந்ததை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப் பின்னாக தகவல் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சரக்கு வாகனத்தின் நடுவே தனி அறை அமைத்து வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போதைப் பொருள் கடத்தி வந்து கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் விற்பனை செய்கின்றனர் என்றும், இவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆரோக்கியராஜ், பெங்களூரில் இருந்து போதை புகையிலை பொருட்களைக் கடத்தி வந்தவர் தருமபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி பச்சையப்பன், குமாரகுடி பகுதியை சேர்ந்தஅருள்ராஜ், எழும்பூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், அதேபகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/4_278.jpg)
இந்த சம்பவத்தில் தொடர்புடைய தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி மணி மகன் விஜய் தலைமறைவாகியுள்ளார். மேலும், வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் இவர் சிறையில் தற்போது உள்ளார். கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் போதை புகையிலை பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய 2 நான்கு சக்கர மினி லாரிகள்,72 மூட்டைகள் கொண்ட 1.5 குட்கா மற்றும் போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஒரே நேரத்தில் 1,5 டன் போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் கூறுகையில், “கடலூர் மாவட்டம் அல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கு வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதை புகையிலை பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் பெயரில் அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் இதனை அடி முதல் நுனி வரை தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்து கைது செய்துள்ளனர். அவர்களின் பணி பாராட்டுக்குரியது. மேலும் மற்ற காவல் நிலையத்தில் உள்ளவர்களும் சிறிய தகவல் கிடைத்தாலும், அது குறித்து விசாரணை மேற்கொண்டு அதனைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை ஈடுபடுவோரைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நடவடிக்கை தொடரும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ 30 லட்சம் இருக்கும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)