
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 30வயது பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டிற்கு சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்ற உறவினர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றுள்ளார். பின்னர் வெளிநாடு சென்ற ராஜ்குமார், அந்த பெண்ணிடம் செல்போனில் தொடர்ந்து ஆசை வார்த்தைகளைக் கூறி கணவரை விட்டுப் பிரிந்து வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதற்கு அவர் மறுத்ததால், "நீ என்னுடன் பேசிய ஆடியோ, புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. அதை உனது கணவருக்கு அனுப்பி விடுவேன்" எனக் கூறி மிரட்டியுள்ளார். உடனே அந்த பெண் பயந்து அவரிடம் கெஞ்சியுள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திய ராஜ்குமார், தனக்கு நிர்வாண நிலையில் வீடியோ கால் செய்ய வேண்டும் என அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளார். அந்த பெண்ணும் ராஜ்குமாரின் மிரட்டலுக்கு பயந்து அவர் கூறியபடி நடந்துள்ளார். அதன் பின்னர் ராஜ்குமார் அந்த பெண்ணிடம், "நான் ஊருக்கு வந்தவுடன் என்னுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் 10லட்சம் ரூபாய் தரவேண்டும்" எனக் கேட்டு மிரட்டியுள்ளார். இதற்கு உடந்தையாக ராஜ்குமாரின் மனைவி ஆனந்தி(26) மற்றும் அவரது அண்ணன் சிவா(31) ஆகியோரும் இருந்துள்ளனர்.
இது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் அனைத்து மகளிர் போலீஸார் ராஜ்குமார், மனைவி ஆனந்தி, சிவா ஆகிய மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த செல்போனை பறிமுதல் செய்து, அதில் இருந்த வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை வைத்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சிவாவை கைது செய்த காவல்துறையினர் ராஜ்குமார் மற்றும் ஆனந்தியை தேடி வருகின்றனர்.