POLICE SALEM INCIDENT NATION HUMAN RIGHTS COMMISSION

Advertisment

சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். வியாபாரியான இவர், இடையபட்டி- வாழப்பாடி சாலையில், மளிகை மற்றும் பழக்கடைகள் நடத்தி வந்தார். குடிப்பழக்கமுடைய இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, வெள்ளிமலைப் பகுதிகளில் மது அருந்தி விட்டு மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பி வந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று (22/06/2021) மாலை, கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், முருகேசன் மற்றும் அவரது நண்பர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த காவல்துறையினர், முருகேசனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த முருகேசனின் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 அவசர ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தும்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகேசனின் உடல் நிலை மோசமடைந்ததால், இன்று (23/06/2021) அதிகாலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது‌ முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வியாபாரி முருகேசன் உயிரிழப்பு தொடர்பாக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்ட 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் கைதாகி உள்ளார்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மாநில மனித ஆணைய தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன், சேலம் சரக டி.ஐ.ஜி. நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.