Skip to main content

கனகராஜ் வழக்கை மீண்டும் கையிலெடுக்கும் காவல்துறை - கொடநாடு வழக்கில் திடுக்!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

Police to reopen Kanagaraj case

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது தொடர்பான விசாரணையை மீண்டும் தீவிரமாகக் கையிலெடுத்துள்ளது காவல்துறை. இதற்குக் காரணம், இந்த வழக்கில் தொடர்புடைய சந்தோஷ் சாமி கொடுத்த வாக்குமூலமே என்றும் கூறப்படுகிறது.

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள போலீசார், இது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறது. கொடநாடு வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் கனகராஜ், அந்த சம்பவம் நடைபெற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்தார். ஆனால், இது எதேச்சையான விபத்து இல்லை என்றும், திட்டமிட்ட படுகொலை என்றும் கனகராஜின் மனைவியும், அவரது உறவினர்களும் தெரிவித்துவந்தனர். ஆனால் இது சாலை விபத்துதான் என நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

 

 

Kodanadu case

 

தற்போது கொடநாடு வழக்கு மீண்டும் வேகமெடுத்திருக்கும் நிலையில், கனகராஜின் மரணம் குறித்தும் விசாரணை நடத்த சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சேலம் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்றிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கனகராஜின் மரணம் குறித்த விசாரணை மீண்டும் கையிலெடுக்கப்படுவதற்கு கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் சாமி கொடுத்த சில தகவல்களே காரணம் எனக் கூறப்படுகிறது.

 

அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியுடன் தன்னை கைது செய்து காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்றபோது, சிபி யாரோ ஒருவருடன் தொடர்ந்து செல்ஃபோனில் பேசிவந்ததாகவும், கனகராஜை கொலை செய்யும்படி கட்டளைகளைப் பிறப்பித்ததாகவும் சந்தோஷ் சாமி விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும், கொடநாட்டிலிருந்து இரண்டு பைகளில் முக்கிய ஆவணங்களை கனகராஜ் எடுத்துச்சென்றதாக தெரியவர, கனகராஜ் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரிப்பதன் மூலம் இது கொலையா? விபத்தா? அந்த முக்கிய ஆவணங்களைக் கொள்ளையடிக்க உத்தரவிட்டது யார்? தற்போது அவை எங்கே இருக்கிறது என்பன உள்ளிட்ட திடுக்கிடும் மர்மங்கள் விலகும் எனக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்