Skip to main content

சேலம் மத்திய சிறையில் போலீசார்  திடீர் சோதனை!

Published on 28/10/2018 | Edited on 28/10/2018
sc


சேலம் மத்திய சிறையில் போதைப்பொருள்கள் புழக்கம் தொடர்பாக புகார்கள் வந்ததன்பேரில், போலீசார் நேற்று (அக்டோபர் 27, 2018) திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் சிக்காததால் போலீசார் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.


சென்னை புழல் சிறைச்சாலையில் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், பீடி, சிகரெட், செல்போன் புழக்கம் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. அதையடுத்து, கடந்த மாதம் புழல் சிறையில் போலீசார் நடத்திய சோதனையில் அங்கிருந்து பல மூட்டை பிரியாணி அரிசி, 15க்கும் மேற்பட்ட டிவிக்கள், ரேடியோக்கள், செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.


அதன் தொடர்ச்சியாக சேலம், கோவை, கடலூர் ஆகிய மத்திய சிறைச்சாலைகளிலும் கடந்த செப். 16ம் தேதி போலீசார் சோதனை நடத்தினர். 


இந்நிலையில், இன்று சேலம் மத்திய சிறையில் மீண்டும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சிறைச்சாலையில் 150 தண்டனைக் கைதிகள்¢ உள்பட 850க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.


அதிகாலை 5.55 மணிக்கு, சேலம் வடக்குக் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் தினகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அம்பிகா, பொன்ராஜ் மற்றும் 35 போலீசார் சிறைச்சாலைக்குள் அதிரடியாக நுழைந்தனர். கைதிகள் அடைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பிளாக்குகளிலும் சென்று சோதனை நடத்தினர். கைதிகளை சிறைச்சாலை வராண்டாவிற்கு வரவழைத்தும் சோதனை நடந்தது.


இதுபோன்ற சோதனைகளின்போது செல்போன், போதைப்பொருள்கள் ஏதாவது இருந்தால் அவற்றை சிறைச்சாலையில் உள்ள சாக்கடை கால்வாய், கழிப்பறைக்குள் வீசி விடுவார்கள். அதனால் சாக்கடைக் கால்வாய்கள், தண்ணீர் தொட்டிகள், சமையல் அறை ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.


காலை 7.30 மணி வரை சோதனை நடந்தது. இந்த திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால் போலீசார் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 


இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''சேலம் மத்திய சிறை வார்டன்களே தடை செய்யப்பட்ட பொருள்களை கைதிகளுக்கு கொடுத்து கல்லா கட்டி வருவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில்தான் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது. சிறை வார்டன்கள் இந்த சோதனையை முன்பே யூகித்து இருந்தார்களோ என்னவோ, கைதிகளிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருள்களை வாங்கியிருக்கலாம். ஆனாலும், தொடர்ந்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றார்.
 

சார்ந்த செய்திகள்