Skip to main content

மதுரையில் ஜோடிகளைக் குறிவைத்து போலீஸ் நடத்திய வழிப்பறி! - சிக்கவைத்த பாலியல் வன்கொடுமை!

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

Police raid on couples in Madurai

 

மதுரையில் இரவு நேர சினிமா பார்த்துவிட்டு, டூ வீலரில் இளம்பெண் ஒருவருடன் வந்த மகேஷ்குமாரை, இரவு நேர சோதனை என்ற பெயரில் வழிமறித்து, ரூ.11 ஆயிரம், செல்போன், ஏ.டி.எம். கார்டு, டிரைவிங் லைசென்ஸை பறித்து அவரை விரட்டிவிட்டு, அந்தப் பெண்ணை விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த திலகர் திடல் குற்றப்பிரிவு போலீஸ்காரர் முருகன் மீது, பெண்ணைக் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, மேலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

போலீஸ்காரர் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் குறித்து விசாரித்தபோது பகீர் தகவல்கள் கிடைத்தன.

 

கரோனா ஊரடங்கின் தொடக்கத்தில், தேவையில்லாமல் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்ததிலிருந்து, சாலையில் வாகனங்களில் பயணிப்போரை மறித்து கேள்வி கேட்பதும், நடவடிக்கை எடுப்பதும் காவல்துறையின் பணியாகிப்போனது. வாகன சோதனை என்பதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, கடந்த 2 வருடங்களாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார் போலீஸ்காரர் முருகன். இதே ரீதியிலான குற்றச்சாட்டினால்தான், திலகர் திடல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனாலும், வழிப்பறியைத் தொடர்ந்திருக்கிறார். 

 

இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை, போதை ஏற்றிக்கொண்டு முருகன் டூ வீலரில் ரவுண்ட்ஸ் வருவதெல்லாம் டவுன்ஹால் ரோடு, நேதாஜி ரோடு, சுண்ணாம்புக்காரத் தெரு,  பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஜங்ஷன் பகுதிகளில்தான். இரவு நேரத்தில் ஜோடியாக டூ வீலர்களில் செல்பவர்களைத்தான் குறிவைப்பார். கையை நீட்டி டூ வீலரை நிறுத்தியதும் முதல் வேலையாக அந்த ஜோடியை தனது செல்போனில் படம் எடுப்பார்.  ‘சினிமாவுக்கு போனோம்..’ என்று டிக்கட்டை காண்பித்தால், பிடுங்கி கிழித்து எறிந்துவிடுவார். விசாரிக்கும்போதே அந்த ஆணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிடுவார். எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் அந்த இரவு நேரத் தாக்குதலில் பொறி கலங்கவைத்து விடுவார். கூனிக்குறுகிப்போய் நிற்கும் ஆணிடமிருந்து செல்போன்,  பணம், ஏ.டி.எம். டிரைவிங் லைசன்ஸ் என அனைத்தையும் பறித்துவிடுவார். 

 

அடுத்து, அந்த ஜோடியிடம் உங்க அப்பா மொபைல் நம்பரைக் கொடுங்க என்று மிரட்டுவார். இருவரையும் தனித்தனியாக விசாரிக்கும்போது, அவர்கள் கணவன் – மனைவி இல்லை என்பது தெரிந்துவிட்டால், ‘நாளை குறிப்பிட்ட தொகையோடு என்னைச் சந்தித்து, செல்போன், ஏ.டி.எம். கார்டை வாங்கிக்கொள். இல்லையென்றால் வழக்கில் சிக்கவைத்து உன்னை சின்னாபின்னமாக்கிவிடுவேன்..’ என்று அச்ச உணர்வை ஏற்படுத்தி, அந்த ஆணை விரட்டிவிடுவார். 

 

செய்வதறியாது தவித்தபடி, அந்த இரவு நேரத்தில் தனியாக விசாரணை வளையத்தில் சிக்கி நிற்கும் அந்தப் பெண்ணை, தான் வழக்கமாகச் செல்லும் விடுதிக்கு இழுத்துச்சென்று, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு அனுப்பிவிடுவார். ஒரு நாளில் குறைந்தது பத்து அப்பாவிகளையாவது முருகன் ‘கார்னர்’ பண்ணி பணம் பறிப்பது, வாடிக்கையாக நடந்துவிடுமாம்.

 

மதுரையில் கஞ்சா புகைப்பவர்களின் நடமாட்டமும் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். அவர்களும் முருகனிடம் சிக்கி பணத்தை இழந்ததுண்டு. நேதாஜி சாலையில் இரவு நேரங்களில் லாரிகளில் இருந்து சரக்கை இறக்கும்போது, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் குறைந்தது 50 ரூபாயாவது மாமூல் வாங்காமல் போகமாட்டாராம். ஒருநாள் தவறாமல் ‘நைட் டூட்டி’ பார்க்க முருகனை எப்படித்தான் காவல்துறை அனுமதித்ததோ? காவல்துறை விசாரணையில், சென்னை காதல் ஜோடி முருகனிடம் சிக்கி மாயமான விவகாரமெல்லாம் தெரியவந்துள்ளது.

 

முருகனைப் போலவே  ‘இரவு நேர வாகன சோதனை’ நடத்தும் போலீஸ்காரர்கள் இன்னும் நான்கைந்து பேர் மதுரையில் உள்ளனராம். ‘போலீஸ் மானம் போய்விடக்கூடாதே..’ என்ற சிந்தனை எழாமல், தீவிரமாக விசாரணை நடத்தினால்தான், எத்தனை பேர் பணத்தையும் மானத்தையும் இழந்துள்ளனர் என்பது தெரியவரும் என்கிறார்கள், மதுரைவாசிகள். 

 

பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுத்தான் ஆகவேண்டும் என்பது போலீஸ் விஷயத்திலும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 45 லட்சம்; வங்கி பணமா? ஹவாலா பணமா? - கார் நம்பரால் பரபரப்பு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
45 lakhs seized in car with car number

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனைச் சாவடியில் செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர்  மார்ச் 19 ஆம் தேதி இரவு அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 45 லட்சம் பணம்  இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறக்கும் படை அதிகாரியான செந்தில் குமார் காரில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி கார் வந்தது தெரிந்தது. அந்த பணம் தனியார் வங்கிக்குச் சொந்தமானது என்று தெரிவித்தனர். அவர்கள் வைத்திருந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்த தொகையும் , காரில் இருந்து தொகையும் சரியாக இருந்தது. ஆனால் ஆவணத்தில் இருந்த காரின் எண்ணும், பணம் கொண்டு வந்த காரின் எண்ணும்  வேறுபட்டிருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அதுகுறித்து விசாரித்தபோது சரியாக பதில் சொல்லவில்லையாம். இதனால் பணத்துடன் அந்த கார் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆவணங்கள் மாறி மாறி இருப்பதால் பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.