Police permission for Muruga devotees conference

மதுரை மாவட்டம் பாண்டி கோயில் என்ற இடத்தில் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அம்மாநாட்டுத் திடலில் ஜூன் 10ஆம் தேதி முதல் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து ஜூன் 22ஆம் தேதி வரை காலை, மாலை என வழிபாடு நடத்தி பிரசாதம் வழங்க முடிவெடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக மாநாட்டுத் திடலில் ஜூன் மாதம் 10ஆம் தேதி முதல் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து 22ஆம் தேதி வரை காலை மற்றும் மாலை இரு வேளைகளில் தினசரி 2 மணி நேரம் பூஜை செய்ய அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்குக் காவல் துறை தரப்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆகவே அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து ஜூன் 22ஆம் தேதி வரை காலை மாலை வழிபாடு செய்து பிரசாதம் வழங்க அனுமதி வழங்கி உத்தரவிடவேண்டும்” எனக் கூறியிருந்தார்.

Advertisment

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வில் கடந்த 9ஆம் தேதி (09.06.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஒவ்வொரு தனியார் நிகழ்வுக்கும் போலீசார் பாதுகாப்பு கேட்பது தேவையற்ற மனித உழைப்பை வீணடிக்கும் செயலாக உள்ளது. ஏன் இது போன்ற நிகழ்வுகளுக்கு போலீசார் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக முறைப்படி இந்த மனு மீது காவல்துறை உரிய முடிவு எடுக்க வேண்டும். எனவே 12ஆம் தேதிக்குள் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி கொடுக்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். அதன் பிறகு 13ஆம் தேதி செட் அமைக்க அனுமதி கோரிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

அதே சமயம் காவல்துறையினர் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அனுமதி வழங்கவில்லை எனில் அந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் செட் அமைக்கும் பணிகளைத் தொடங்கலாம் ஆனால் எவ்வித பூஜைகளும் நடத்தக்கூடாது” என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு 52 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இத்தகவலானது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுபடை வீட்டின் மாதிரி அரங்கு அமைக்கவும் நீதிபதி அனுமதி அளித்துள்ளார். அதோடு மத நிகழ்வுகளில் அரசியல் கலக்கக் கூடாது எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.