
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் கில்டா மெரி. அவர் அந்த பகுதியில் மதுக்கடைகள் இல்லாததால் சட்டவிரோதமாக வீட்டில் மதுவைப் பதுக்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை இரண்டு பேர் கில்டா மேரியின் வீட்டிற்குச் சென்று 'நாங்கள் அடுமனை காவல் நிலையத்திலிருந்து வந்திருக்கும் காவல் ஆய்வாளர்கள், நீ சட்டவிரோதமாக மது விற்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. உன்னை கைது செய்ய வேண்டாம் என்றால் எங்களுக்கு லஞ்சமாக ஒரு தொகையை கொடுக்க வேண்டும்' எனக்கூறி மிரட்டியுள்ளனர். பின்னர் கில்டா மேரிக்கு மகள் இருப்பதை அறிந்துகொண்ட இருவரும் அவரை போனில் தொடர்பு கொண்டு 'சட்டவிரோத மது விற்பனையை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் உனது மகளை எங்களோடு அனுப்பி வைக்க வேண்டும்' எனக் கூறி மிரட்டி உள்ளனர்.
இதனைக்கேட்டு அதிர்ந்த கில்டா மெரி, ஊர் மக்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். தொலைப்பேசியில் பேசிய இருவரும் மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்றபோது அங்கு மறைந்திருந்த ஊர்மக்கள் இரண்டு பேரையும் சுற்றிவளைத்துப் பிடித்து காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அப்பொழுது இருவரில் ஒருவன் தப்பி ஓடியுள்ளார். பிடிபட்ட மற்றொருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் செறுவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சசிதரன் நாயர், ரீகன் என்பது தெரியவந்தது. இருவரும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இருவரும் காவல்துறையுடன் சேர்ந்து பணியாற்றும்போது சில இடங்களை நோட்டமிட்டு அங்குசென்று பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது. தற்பொழுது ஒருவரை கைதுசெய்த போலீசார் தப்பி ஓடிய ரீகன் என்பவரைத் தேடி வருகின்றனர்.