eb

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 33). விவசாயியான இவருக்கு சொந்தமான விளை நிலத்தில் உள்ள மின் இணைப்பு இவரது தந்தை ஜெயராமன் பெயரில் இருந்தது.

இதனால் அன்பழகன் அந்த மின் இணைப்பை தனது பெயருக்கு மாற்ற விரும்பினார்.

Advertisment

அதற்காக அவர் வடபொன்பரப்பியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்தார். அப்போது அங்கிருந்த சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்த இளமின் பொறியாளர் மணிகண்டன்(32) என்பவர், ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் மின்இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய முடியும் என்று கூறினார்.

அதற்கு அன்பழகன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி விட்டு வந்து விட்டார்.

இந்த நிலையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இதுபற்றி புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி, ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அன்பழகன் வடபொன்பரப்பி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.

Advertisment

லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசாரும் வடபொன்பரப்பிக்கு சென்று மின்வாரிய அலுவலகத்தின் வெளியே மறைந்திருந்தனர்.

அப்போது அன்பழகன் அலுவலகத்தில் இருந்த மணிகண்டனிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுக்க முயன்றார். அதற்கு மணிகண்டன், இங்கு வைத்து பணம் தரவேண்டாம், அலுவலகத்தின் வெளியே கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் உள்ள பள்ளி வாசல் முன்பு சென்று நிற்குமாறும், சிறிது நேரத்தில் தான் வந்து வாங்கிக்கொள்வதாகவும் கூறினார்.

இதையடுத்து அன்பழகன், பள்ளி வாசல் அருகில் சென்று நின்றார். லஞ்ச ஒழிப்பு போலீசாரும் பள்ளி வாசல் அருகே சென்று மறைந்திருந்தனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன், அன்பழகனிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை வாங்கினார். உடன் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மணிகண்டனை பிடிக்க முயன்றனர்.

இதை பார்த்த அவர் அங்கிருந்து ஓடத்தொடங்கினார். இருப்பினும் போலீசார் விரட்டிச் சென்று மணிகண்டனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரி ஒருவரை போலீசார் நடுரோட்டில் துரத்தி சென்று பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.