Police net for student and school administrator

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நஞ்சை கொளாநல்லி பகுதியைச் சேர்ந்த 16 வயது 10 ஆம் வகுப்பு மாணவி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனுடன் பழகி வந்துள்ளார். மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகிய நிலையில் மாணவி 4 மாதம் கர்ப்பம் அடைந்தார். இந்த தகவலை தனது பெற்றோரிடம் அந்த மாணவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவனின் பெற்றோர் இதுகுறித்து தனது உறவினரான கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் அமுதா (42), பள்ளி ஊழியர் சிவகாமி ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதையடுத்து அந்த மாணவியை அமுதாவும், சிவகாமியும் கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளனர். அங்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர் மறுத்ததால் மீண்டும் மாணவி அழைத்து சென்று விட்டனர். இதுகுறித்து அந்த மருத்துவமனையின் டாக்டர் கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த விவரத்தை மாணவி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாணவி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் மீது மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன், மாணவனின் தாய் மற்றும் தந்தை, பள்ளி ஊழியர் சிவகாமி, கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் அமுதா ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறுவனின் பெற்றோர், பேரூராட்சி தலைவர் அமுதா ஆகிய 3 பேரை மலையம்பாளையம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisment

மேலும் தலைமறைவாக இருக்கும் மாணவன் மற்றும் பள்ளி ஊழியர் சிவகாமி ஆகிய இருவரைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.