
கோயில்களைப் புனரமைப்பதாகக் கூறி 44 லட்சம் ரூபாய்வரை வசூலித்து மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்தின் வங்கிக்கணக்கை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள பெரியசாமி மலையில் துணைக் கோயில் எனக் கூறப்படும் பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சுடுமண்ணால் செய்யப்பட்ட செல்லியம்மன், பெரியசாமி, சஞ்சீவி ஆஞ்சநேயர், சப்த கன்னிகள் உட்பட ஏராளமான சிலைகள் இருந்தன. கடந்த ஆண்டு மர்ம நபர்கள் இந்த சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். இதையடுத்து, இந்தக் கோவிலை புனரமைப்பதாகக் கூறி கார்த்திக் கோபிநாத் கூட்டு பணம் திரட்டும் முயற்சியில் பணம் வசூலித்தார். அவர் ரூ.44 லட்சம்வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலை தனிநபர் ஒருவர் சீரமைப்பதாகக் கூறி பணம் வசூலித்தது சர்ச்சையான நிலையில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் ஆணையர் அளித்த புகாரின்பேரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார்.
15 நாட்கள் நீதிமன்ற காவலில் கார்த்திக் கோபிநாத் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வங்கிக்கணக்கை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.