திருச்சி மாவட்டக் காவலர்களுக்கான குறைதீர் கூட்டம் சுப்ரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை (30.09.2021) நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பா. மூா்த்தி கலந்துகொண்டு, காவலர்களின் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அதேபோல், திருச்சி மாநகரிலும் காவலர்களின் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குறைதீர் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தக் குறைதீர் கூட்டத்தில், பணியிடமாற்றம், பணி உயர்வு, சம்பள பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது ஒருவார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் சக்திவேல், முத்தரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.