Advertisment

மஞ்சுவிரட்டில் உயிரிழந்த காவலரின் உடலைத் தூக்கிச் சென்ற எஸ்.பி

 police man passed away in Manjuvirattu

Advertisment

ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போல பாதுகாப்பாக ஒவ்வொரு காளையாக இல்லாமல் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடும் மஞ்சுவிரட்டால் பார்வையாளர்கள் முதல் பாதுகாவலர்கள் வரை பலர் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பலரும் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த நிலையில் நேற்று கல்லூர் மஞ்சுவிரட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த நவநீதகிருஷ்ணன் என்ற போலீஸ்காரரும் சுப்பிரமணியன் என்ற பார்வையாளரும் காளைகள் முட்டியதில் பலியாகி உள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம்கல்லூர் கிராமத்தில் உள்ள அரியநாயகி மாரியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு செம்முனிஸ்வரர் கோயில் வளாகத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தஞ்சாவூர், திருச்சி உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். தொடக்கத்தில் வரிசையாக அவிழ்க்கப்பட்ட காளைகள் பின்னர் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்துவிடத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏராளமான காளைகள் பார்வையாளர்கள் நிற்கும் பக்கங்களிலும் ஓடியது. வரிசையாக காளைகளை அவிழ்க்க வேண்டும் என்று அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் கூட்டத்திற்குள் வேகமாக ஓடிய ஒரு காளையை பார்த்து இளைஞர்கள் அங்குமிங்குமாக ஓடிய நிலையில், பாதுகாப்பிற்காக நின்றிருந்த மீமிசல் காவல் நிலைய காவலர்நவநீதகிருஷ்ணன்(32) அந்த இடத்திலிருந்து தப்பி ஓட முயலும்போது வேகமாக வந்த காளை குத்தி தூக்கி வீசியது. போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணனை காளை விரட்டுவதையும் குத்தி தூக்கி வீசும் காட்சியையும்மீனிகந்தாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது கேமராவில் பதிவு செய்துள்ள காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலத்த காயமடைந்த காவலரை அங்கு நின்றவர்கள் மீட்டு முதலுதவி செய்து தயாராக நின்ற ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

 police man passed away in Manjuvirattu

அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி சபரி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணி செய்கிறார். இருவரும் 2013ல் போலீஸ் வேலைக்கு வந்தவர்கள். இவர்களுக்கு மிதுன்சக்கரவர்த்தி (8), கீர்த்திவாசன் (5) என்ற இரு மகன்கள் உள்ளனர். பாதுகாப்பிற்குச் சென்ற காவலர், காளை முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலேயே பணியிடத்தில் காளை முட்டி உயிரிழந்த போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார்.

காளை முட்டி உயிரிழந்த போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணன் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது வீட்டிற்குச் சென்று அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் சொன்ன மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, காவல்துறைஅணிவகுப்பு மரியாதையுடன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு நவநீதகிருஷ்ணன் உடலைத்தானே முன்னின்று தூக்கிச் சென்றார். காவல்துறை அணிவகுப்புடன் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அதே பகுதியில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. மாவட்ட எஸ்.பி, இறந்த காவலரின்உடலைத்தூக்கிச் சென்றதைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பணியில் இருந்தபோது உயிரிழந்த போலீஸ்காரருக்கு ரூ.20 லட்சம் முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளது போதுமானதாக இல்லை. கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர். மேலும் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்கு உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான பாதுகாப்பு பணிக்குச் செல்லும் போலீசாருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.

pudukkottai police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe