ADVERTISEMENT

கள்ள நோட்டுகளை கொடுத்து ஆடு வாங்கிய ஆசாமிகள்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்!!

06:11 PM Jun 23, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

திண்டிவனம் அருகே போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ஐந்து ஆடுகளைக் கடத்திச் சென்ற பெண் உட்பட 3 மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி, இவரது மனைவி வசந்தா. இவர் ஆடுகள் வளர்த்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டிற்கு ஓட்டிக் கொண்டு வந்தார். அப்போது விழுப்புரம் மார்க்கத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆட்டோவில் ஒரு பெண் உட்பட மூன்று நபர்கள் வசந்தாவிடம் ஆடு விலைக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதற்கு மறுத்த வசந்தாவிடம் தங்கள் வீட்டில் விசேஷம் இருப்பதால் அவசியம் விலைக்குக் கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். உடனே வசந்தா சின்ன ஆடு ரூ.5000 எனவும், பெரிய ஆடு 6 ஆயிரம் ரூபாய் எனவும் கூறியதாகத் தெரிகிறது. ஆட்டோவில் வந்த மர்ம நபர் 5 ஆடுகள் மொத்தம் 24 ஆயிரத்திற்கு தருமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுத்த வசந்தா ஆடுகளை ஓட்டிச் செல்ல முற்பட்டார். உடனே அவரை தடுத்து நிறுத்திய அந்த மர்ம ஆசாமி நீ கேட்ட பணத்தைத் தருகிறேன் நான்கு சின்ன ஆடு, ஒரு பெரிய ஆடு தருமாறு கூறியதையடுத்து அந்த மர்ம நபர் 5 ஆடுகளையும் தாங்கள் வந்த ஆட்டோக்களில் ஏற்றியுள்ளார். பின்னர், தான் வைத்திருந்த 13, 2000 ரூபாய் நோட்டுகளை வசந்தாவிடம் கொடுத்து நீ கேட்ட பணம் 26,000 பெற்றுக் கொள் எனக்கூறிக் கொடுத்துள்ளார்.

பின்னர் பத்திரமாக வீட்டுக்கு எடுத்துச் செல் என்று கூறி அங்கிருந்து திண்டிவனம் மார்க்கமாக ஆட்டோ சென்றது. கேட்ட பணம் முழுவதுமாக கொடுத்ததால் சந்தேகமடைந்த வசந்தா ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் வீட்டிலிருந்த தனது மகள் பூங்குழலியிடம் ரூபாயைக் காண்பித்து சந்தேகம் கேட்டுள்ளார். அந்த ரூபாய் நோட்டை வாங்கிப் பார்த்த அவரது மகள், "நீ வாங்கி வந்த நோட்டுக்களில் எட்டு நோட்டுகள் ஒரே எண் கொண்டதும், மீதமுள்ள நோட்டுகள் ஒரே எண் கொண்ட கலர் ஜெராக்ஸ்" எனக் கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த வசந்தா தனது சந்தேகத்தை உறுதி செய்ய நெடுஞ்சாலையில் உள்ள கோழிக் கடையில் அந்த ரூபாயில் ஒரு நோட்டிற்கு சில்லரை கேட்டுள்ளார்.

அதனை வாங்கிப் பார்த்த கோழிக் கடை வியாபாரி, இந்த நோட்டு போலி எனக் கூறியதையடுத்து மயிலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் வசந்தாவின் வீட்டுக்கு வந்து நடந்த விவரங்களைச் சேகரித்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலி ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து ஆடுகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT