/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_209.jpg)
திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து நிலங்களை அபகரித்துள்ளதாக எஸ்.பி.வருண்குமாருக்கு புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி - புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆப்ரேஷன் அகழி என்ற பெயரில் போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் நில மோசடி தொடர்பாக திருச்சி அரியமங்கலம் பால் பண்ணை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் பட்டேல் என்பவரது வீட்டிற்கு நேற்று முன்தினம்(16.10.2024) போலீசார் சோதனைக்கு சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் உள்ளவர்கள் போலீசாரை அனுமதிக்கவில்லை. இரவு நேரம் என்பதால் போலீசார் உள்ளே செல்லாமல் மீண்டும் காலையில் சோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டனர். இதனைத் தொடர்ந்து அன்றைய தினம் இரவு முழுவதும் வீட்டைச் சுற்றி போலீசார் காவல் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் மறுநாள்12 மணி நேரம் காத்திருந்தும் திறக்கப்படாததால் அன்றும் காத்திருந்தனர். பின்னர் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பழனி தலைமையிலான போலீசார் நீதிமன்ற ஆணை பெற்று மோகன் பட்டேல் வீட்டில் சோதனை நடத்த வந்தனர்.
அப்போது வீட்டின் வெளி கேட் பூட்டப்பட்டிருந்தது. வீட்டினுள் இருந்த நபர்கள் கதவைத் தட்டி நீண்ட நேரமாகியும் திறக்காததால் கிராம நிர்வாக அலுவலர் பாலாம்பிகா முன்னிலையில் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். நேற்று(17.10.2024) மதியம் ஆரம்பித்த சோதனை தொடர்ந்து 7மணி நேரமாக நடைபெற்றது. மேலும் மோகன் பட்டேலின் வீட்டில் உள்ள அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் கணக்கெடுத்துப் பதிவு செய்து அவரது மகள் பூர்ணிமா பட்டேலிடம் கையெழுத்திடுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். மேலும் வீட்டில் உள்ள லாக்கரை திறக்க போலீசார் வலியுறுத்தியபோது, வீட்டில் உள்ளவர்கள் தன்னிடம் சாவி இல்லை எனக் கோரி திறக்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சுமார் 500 கிலோ எடை கொண்ட லாக்கரை அங்கிருந்து தகர்த்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியே எடுத்து வந்தனர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது
இதையடுத்து, காவல் துறைக்குச் சொந்தமான மீட்பு வாகன(கிரேன் ) உதவியுடன் லாக்கரை தூக்கி காவல் வாகனத்தில் வைத்து அனுப்பி வைத்தனர். இந்த லாக்கரை நீதிபதி முன்பு திறக்கப்பட்டு அதில் உள்ள ஆவணங்கள் கைப்பற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே, நள்ளிரவு 12 மணி கடந்ததைத் தொடர்ந்து மோகன் பட்டியலின் மகள் பூர்ணிமா பட்டேல் லாக்கரை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)