ADVERTISEMENT

‘பால் பாக்கெட் போட்டாலும் சரி.. போடலைன்னாலும் சரி..’ -பொங்கும் காவல்துறையினர்!

06:38 PM Jun 27, 2020 | kalaimohan

ADVERTISEMENT

“காவல்துறையினரால் ஒவ்வொரு நாளும் தொந்தரவுதான். பால் முகவர்களை விநியோகம் செய்யவிடாமல் தடுக்கின்றனர், வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர், விற்பனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுகின்றனர். அதனால், காவல்துறையினரின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் அவசர முடிவு எடுத்திருக்கிறோம். நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை, போலீஸ்காரர்கள் தொடங்கி, உயர் அதிகாரிகள் வரை, அவர்களின் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யமாட்டோம்.” என்று அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி அறிவித்திருக்கும் நிலையில், காவல்துறையினர் தரப்பில் எதிர்வினை ஆற்றியுள்ளனர்.

ADVERTISEMENT

‘மிஸ்டர் பொன்னுசாமி.. நீங்க விளம்பரத்திற்காக பொங்க வேண்டாம்’ என்று காவல்துறை நண்பர் ஒருவர், பொன்னுசாமிக்கு எழுதிய கடிதத்தை நமக்கு அனுப்பியிருக்கிறார்.

அதில், ‘சரி உங்க (பொன்னுசாமி) பேச்சுக்கே வருவோம். உங்க சங்கத்து ஆட்கள் எத்தனை பேர் வண்டியை நாங்க பறிச்சு வச்சிருக்கோம், எந்தெந்த ஸ்டேசன்ல நீங்க புகார் குடுத்திருக்கீங்க, ஒவ்வொரு நாளும் உங்க பேட்டியை, அப்படியே டயத்தை குறிப்பிட்டு, வாட்ஸ்ஆப்ல ஊடகங்களுக்கு அனுப்பி, விளம்பரம் தேடுறீங்களே! அதே மாதிரி, இந்த பாய்ன்ட்ல இருக்கிற போலீஸ்காரன், பால் வண்டியை மறிச்சான், கேஸ் போட்டான்னு... ஆதாரமா ஒரு வீடியோ போடுங்க. அவ்வளவு ஏன்? கேஸ் போட்டதற்கான சலான் இருந்தால் அதை அப்படியே போட்டோ பிடிச்சு ஊடக நண்பர்களுக்கு அனுப்புங்க. சும்மா வெறும் வாயால வடை சுடாதீங்க.

நாங்க ராத்திரி, பகலா டியூட்டி பார்க்கிறோம். காய்கறிவண்டி, பால்வண்டி, மளிகை சாமான், சிலிண்டர் வண்டி, மருந்து பாரம் ஏத்திட்டு வருகிற வண்டிகளை எல்லாம் எந்தவித கெடுபிடியும் பண்ணாமல், அனுப்பிக்கிட்டு இருக்கோம். நீங்க உங்க பெயரை பிரபலமாக்கணும்னு நினைச்சா, சிம்பு தனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யச் சொல்கிறார். அவர் பீப் சாங் பாடுறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுங்கன்னு, எங்ககிட்ட வந்து புகார் கொடுப்பீங்க. டெல்லியில் போராட்டம் நடத்துற தமிழக விவசாயிகளை இங்க இருக்கிற பிஜேபிகாரங்க கொச்சைப்படுத்துறாங்க. அவங்க மீது நடவடிக்கை எடுங்கன்னு வந்து நிப்பீங்க. இப்ப போலீஸ்காரங்க வீட்டிற்கு பால் போடமாட்டோம்னு கம்பு சுத்துறீங்க.

இப்ப நீங்க பாலை கட் பண்ணிட்டதால, யாரும் ஒண்ணும் மோசம் போயிடலை. நாங்க எப்பவும் போல, எங்க வீட்டிற்கு பக்கத்து கடையில்தான் பால் வாங்கிட்டிருக்கோம். எங்க பக்கத்து வீட்டில் பால் போடுற ஆயாம்மா, இன்றைக்கும் வந்து, பால் போட்டுட்டு போய்ட்டுத்தான் இருக்காங்க. அதனால் உங்க பொங்கச் சோறு எங்களுக்கு வேண்டாம்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காவல்துறை குரூப் ஒன்றிலும், தங்கள் பங்குக்கு இப்படி ’ரியாக்ட்’ செய்துள்ளனர் -

‘இன்றுமுதல் பால் விநியோக விற்பனையாளர் அனைவரும், கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்து, அரசு மருத்துவரின் சான்று பெற்றே ஒவ்வொரு தெருவிலும் உள்ள வீடுகளுக்கு, பால் விநியோகம் செய்ய நுழையவேண்டும்.

மேலும், பால் விற்பனையாளர்கள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் (மாஸ்க்) கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மேலும், தரமான கையுறைகள் அணிந்திருக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ், RC Book ஆகியவை கட்டாயமாக போலீசார் சோதனையின்போது காட்டப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் வாகனம், பாலுடன் கைப்பற்றப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.

இரு நபர்கள் பயணிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தவேண்டிய மோட்டார் சைக்கிளில், வியாபார நோக்கோடு, வணிகரீதியாக, இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதற்கு (பால் விநியோகம் செய்ய), அனைத்து விற்பனையாளர்களும், அந்தந்த மாவட்ட RTO அலுவலகத்தில் ஆய்வாளர் (Break Inspector) தரத்தில் உள்ள அதிகாரியிடம், தகுந்த எழுத்துபூர்வ அனுமதியை கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் வாகனமும், வாகனம் ஓட்டி வரும் நபரும் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். நீங்கள் பால் பாக்கெட் போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி, இனி சட்டம் தன் கடமையைச் செய்யும்!’

இவ்வாறு, தங்கள் மனதுக்குத் தோன்றிய கெடுபிடிகளைப் பட்டியலிட்டு, ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இணையதளங்களிலும், காவல்துறையினரை ஆதரித்தும், பால் முகவர்களைக் கலாய்த்தும், ‘மீம்ஸ்’ உருவாக்கி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT