
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குப் பயணிகளின் வசதிகளுக்காகக் கடைகளுடன் கூடிய வணிக வளாகம் அமைந்துள்ளது. அதன்படி கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவின்குமார் என்பவர் இங்கு டீ கடை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் தான் இன்று (16.02.2025) இன்று அதிகாலை 03.40 மணியளவில் கடையில் இருந்து பயங்கர வெடிச் சத்தத்துடன் மர்மப் பொருள் வெடித்துள்ளது. இதனால் கடையில் இருந்த மின்விசிறி, சிசிடிவி கேமராக்கள் எனப் பல்வேறு பொருட்கள் சேதமடைந்து சிதறியுள்ளன.
இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவியது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்திற்கு மின் கசிவோ, சிலிண்டர் வெடித்ததோ காரணம் இல்லை எனக் காவல் துறையினரும், தீயணைப்புத்துறையினரும் தகவல் தெரிவித்துள்ளனர். அதே சமயம் தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதிகாலை வேளையில் நிகழ்ந்த இந்த விபத்தால் கடையில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தவெடி விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடைக்குள் எந்த விதமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன, வெடி பொருட்கள் ஏதேனும் இருந்ததா போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.