Police investigate 264 pound jewelery case

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகில் உள்ளது பாதூர்காந்திநகர் பகுதியில் சாலையோரம் உள்ள ஒரு டீக் கடையில் சென்னையை சேர்ந்தவர்களின் டெம்போ டிராவலர் வாகனத்தில் இருந்த 264 பவுன் நகை கொண்ட பெட்டி காணாமல் போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தங்க பெருமாள். இவரது மகன்கள் பெரியசாமி, ஆனந்தராசு இருவரும் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்களுடன் ஒரு டெம்போ ட்ராவலர் வேனில் தங்களது சொந்த ஊரான விளாத்திகுளம் அருகில் உள்ள நாகலாபுரம் புதூர் கிராமத்தில் உள்ள அவர்களது உறவினர்களை பார்த்துவிட்டு வருவதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

Advertisment

அந்த டெம்போ டிராவலர் வாகனத்தை திருப்போரூர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த வாகனத்தை நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காந்திநகர் பகுதியில் நிறுத்திவிட்டு டீக் குடிக்க அனைவரும் இறங்கி சென்று மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது மேற்கூரையில் வைத்து கட்டப்பட்டிருந்த பெட்டிகளில் ஒரு பெட்டி காணாமால் போயிருந்தது. மேலும், அந்தப் பெட்டியில், 264 பவுன் நகை இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அருகே இருந்த திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள் வந்த வழியின் சி.சி.டி.வி காட்சிகல் ஆராயப்பட்டன. அதில், விக்கிரவாண்டியில் வேனை நிறுத்தியுள்ளனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவினை போலீசார் ஆய்வு செய்த போது அங்கே வேன் மீது பெட்டி கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. ஆனால், உளுந்தூர்பேட்டை அருகே நிறுத்தி இருந்த போது பெட்டி காணாமல் போயுள்ளது.

இந்தப் பகுதியில் வேன் வந்து கொண்டிருக்கும் போதே கொள்ளையர்கள் இன்னொரு வேனில் பின் தொடர்ந்து வந்து வாகனங்களின் மேல் கூரையில் இருக்கும் பெட்டிகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. அதன்படி இந்தக் கொள்ளை நடந்ததா அல்லது வரும் வழியில் பெட்டி தவறி கீழே விழுந்து விட்டதா என பல்வேறு கோணங்களில் 3 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.