Skip to main content

சிறுவர்களை மிரட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர்... கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்..

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

Police inspector who intimidated children ... social activists.!

 

 

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களுடன் கலந்துகொண்ட சிறுவர்களை போலீசார் அதட்டி, மிரட்டி அப்புறப்படுத்த முயன்றதால், போலீசாருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள்.

 

மண்ணின் மக்களுக்கான போராட்டம், நம்முடைய மகன், மகள்களுக்கான போராட்டம், நம்முடைய அடுத்த தலைமுறைக்கான போராட்டம் என மாணவர்கள் உயிரைக் குடிக்கும் மனுநீதி கல்வி முறையான நீட் தேர்வினை எதிர்த்து நகரின் அனைத்து சமூகநல ஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரத்தில் மத்திய, மாநில அரசிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பி.எல்.ராமச்சந்திரன், பெரியார் முத்து, மாறன், சேதுராஜன், ஜான்பால், கோவிலூர் சரவணன், சகுபர், தமிழ் கார்த்தி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் "நீட் எனும் பெயரில் மாணவர்களை கொன்று புதைக்காதே... நீட் தேர்வினை ரத்து செய்..." என வாசகங்கள் தாங்கிய பதாகைகளை இரு சிறுவர்கள் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.   

 

"உன்னைய யார் இங்கு வரச்சொன்னது..? இது கூடாது தெரியுமா..?" என காரைக்குடி வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் அதட்டி மிரட்ட நடுங்கினர் இரு சிறுவர்களும். “அவங்களை மிரட்ட நீங்க யார்..? அவர்களுடைய பெற்றோர்களுடன்தான் இங்கு வந்துள்ளனர். நாளைய தலைமுறைக்கானப் போராட்டம் இது" என பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு இன்ஸ்பெக்டருக்கு எதிராகவும் கோஷங்களை முழங்கியது.

 

இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவிய நிலையில், ஆர்ப்பாட்டக் குழுவினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்து கலைந்து சென்றனர். முன்னதாக நீட் தேர்வால் உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

“ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Minister Udayanidhi Stalin says Jayalalitha should be praised

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்த குழுவினர் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்றத் தொகுதிவாரியான பொதுக்கூட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களுடன், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில், இன்று (17-02-24) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பொதுக்கூட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “புதிய கல்வி கொள்கை மூலம் 5,8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்து நமது மாணவர்களை படிக்கவிடாமல் பா.ஜ.க செய்கிறது. ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்திற்குள் நீட் தேர்வு வரவில்லை. அவர் தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை நுழைய விடவில்லை. 

நீட் விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்ட வேண்டும். அவர் மறைந்ததும், அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் வந்தது. நீட் தொடர்பாக அனிதா முதல் ஜெகதீசன் வரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர். நீட் தேர்வு ரத்து தொடர்பாக டெல்லியில் விரைவில் போராட்டம் நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் இருந்து என்றைக்கு நீட் தேர்வு விலக்கு ஏற்படுமோ அதுதான் முதல் வெற்றி” என்று கூறினார்.