
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் உள்ள டி. தேவனூர் கூட்டு ரோடு பகுதியில், அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் ராம்தாஸ், உதவி ஆய்வாளர் தங்கவேல், தனிப்பிரிவு ஆனந்தன் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் பயணம் செய்த ஓட்டுநர், கூட வந்தவர்கள் இரண்டு பேர் என மூவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அதில் புதினா, கொத்தமல்லி வைக்கப்பட்டிருந்தது. இவற்றுக்கு நடுவே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஏராளமாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்தப் புகையிலை பொருட்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வரப்பட்டடுள்ளதாகவும், அதனை திருவண்ணாமலை வேட்டவலம், வீரபாண்டி, அரகண்டநல்லூர், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்குள்ள வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததையும் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து மினி லாரி ஓட்டுநர் பையூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் அவருடன் வந்த பார்ட்னர்களான திருக்கோவிலூர் சதீஷ், அருணாபுரத்தைச் சேர்ந்த மணிபாலன் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் 10 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தகவலறிந்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பார்வையிட்டார். வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்ததோடு கடத்தல்காரர்களையும் கைது செய்த காவல்துறையினரை பாராட்டினார்.
விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்டம் எல்லை பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து போதை புகையிலை, மது பாட்டில்கள், கள்ளச்சாராயம், கஞ்சா பொட்டலங்கள் ஆகியவை கடத்தப்படுவது தினசரி நடைபெற்றுவருகிறது. காவல்துறையினரும் கடத்தல்காரர்கள் கடத்திவரும் அனைத்துப் போதை பொருட்களையும் பறிமுதல் செய்த வண்ணம் உள்ளனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை, போதைப் பொருட்கள் கடத்துவதுபவர்களை போலீசார் கைது செய்வது தினசரி சம்பவங்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.