police hunting for sand truck owners - Audio release

Advertisment

கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறன. அதன் ஒருபகுதியாகத் தமிழகத்தில் கட்டிட வேலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வேலைகளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் சென்னையில் கட்டிட வேலைகளுக்குச் செயற்கை மணல் பயன்படுத்தப்படுகிறது. அந்த மணல் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட மணலைச்சென்னை கொண்டு வரும் போது, செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல்நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள கரோனா சோதனைச் சாவடியில் பணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது இது தொடர்பாக நக்கீரனுக்கு ஆடியோ ஒன்று வந்துள்ளது. அதில் காவலர் பாபு என்பவர் லாரி ஓட்டுனர் ஒருவரிடம், "உன்னுடைய வண்டி எங்கள் காவல்நிலையத்தைத் தாண்டிதான் செல்ல வேண்டும். மற்றவர்கள் ஒரு வண்டி கடந்து செல்வதற்கு ரூ.1,000 தருகிறார்கள். மூன்று நாட்கள் எங்களுக்கு நல்ல வேட்டைதான். உன்னுடைய உரிமையாளரை என்னிடம் வந்து டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கச் சொல்" என்று கூறுகிறார்.

Advertisment

police hunting for sand truck owners - Audio release

இது தொர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு மாநில மணல் லாரி கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், "45 நாட்கள் எங்களுடைய வண்டிகள் ஓடாமல், எங்களுடைய தொழில் முடங்கிப்போனது. தற்போது கட்டிட வேலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், செயற்கை மணல் பயன்பாட்டிற்காக எங்களுடைய தொழில் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆனால் மணலை ஏற்றி வரும்போது சோதனைச் சாவடிகளில் லாரிகள் மடக்கப்பட்டது. இதன்காரணமாக காலதாமதம் ஆனதைதொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையனிடம் சென்று, இது குறித்து தகவல் தெரிவித்தோம்.

அவர் மணல் அள்ளிக்கொண்டு வருவதற்கான உரிமத்தை அளித்தார். இதை வைத்திருந்தால்காவல்துறையினர் உங்களுடைய லாரியைத் தடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார். ஆனால் இந்த ஆடியோவில் பாபு என்பவர் கட்டாய வசூல் வேட்டை நடத்துகிறார். இது குறித்து கடந்த 8ஆம் தேதி செங்கல்பட்டு எஸ்.பி.-யிடம் புகார் அளிக்கச் சென்றபோது அவர் இல்லை என்பதால் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டரிடம் புகார் தெரிவித்தோம். அவர் இதில் சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆத்தரமடைந்த பாபு, லாரி உரிமையாளர்களை மீண்டும் மிரட்டியுள்ளார்" எனத் தெரிவித்தார்.

Advertisment

இது குறித்து காவலர் பாபுவை நக்கீரன் தொடர்பு கொண்ட போது, உங்களுக்கு பதில் கூற முடியாது என்று அவர் போனை வைத்து விட்டார்.

ஊரடங்கு நேரத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் உழைத்துக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த துறைக்கும் கலங்கம் ஏற்படுகிறது.