Skip to main content

போராடிய பொதுமக்களை வேட்டையாடும் போலீசார் - ஹிட்லர் பாணி பயங்கரத்திற்கு ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
s mk

 

சேலம் உள்ளிட்ட பசுமை சாலைத்திட்டம்  நிறைவேற்றப்பட நினைத்துள்ள மாவட்டங்களிலும்  தூத்துக்குடியிலும் காவல்துறை மூலம் மக்களையும்,விவசாயிகளையும், தாய்மார்களையும் மிரட்டி, ஜனநாயகத்தைப் பலியிட்டு ஹிட்லர் பாணி பயங்கரத்திற்கு உயிரூட்ட முயற்சித்திடும் நிலை, பல எச்சரிக்கைகளுக்குப் பிறகு இனியும் தொடர்ந்தால்,  தி.மு.க.சார்பில் மக்களை திரட்டி  அறவழியில்,
‘‘மாபெரும் வெகுமக்கள் போராட்டம்’’ நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது குறித்த அவரது அறிக்கை:


’’சென்னை முதல் சேலம் வரை போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள எட்டு வழி பசுமை சாலைக்காக வேளாண் விளைநிலங்களுக்குள் நடத்தப்படும் நெடுஞ்சாலைத்துறையின் அளவீடுகளை எதிர்த்து ஆங்காங்கே விவசாயிகளும், பொதுமக்களும் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஒரு பக்கம் ஒப்புக்கு கருத்துக் கேட்புக் கூட்டம் என்று அறிவித்து விட்டு, இன்னொரு பக்கம் பொதுமக்களின் கருத்துகளையும் அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் பாரபட்சமின்றி கணித்து அறிந்து கொள்வதற்கு முன்பே, அதிகாரிகளை வைத்து அவசரம் அவசரமாக  நிலங்களை அளவிடும் பணிகளிலும், விவசாய நிலங்களுக்கு குறுக்கே கல் ஊன்றும் பணிகளிலும் ஈடுபடுவது கடுமையான கண்டனத்திற்குரியது.

 

சேலத்தில் அப்படிப் போராடும் விவசாயிகள், தாய்மார்களை எல்லாம் காவல்துறையை வைத்து கைது செய்வதும், நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து துன்புறுத்துவதும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் உருவாக்கியிருக்கிறது.  இன்று ஆச்சான்குட்டைப்பட்டி புதூர் பகுதிகளில் இந்த நில அளவீட்டை எதிர்த்த பொதுமக்களையும் விவசாயிகளையும்  கைது செய்து காவல்துறை சேலம் மாவட்டத்தில் ஒரு பெரும்பீதியை உருவாக்கி வருகிறது. அது மட்டுமின்றி இந்த சாலை போடத் திட்டமிட்டுள்ள  ஐந்து மாவட்ட மக்களிடமும் காவல்துறையைக் கொண்டு விவசாயிகளை மிரட்டியும், பசுமை சாலைத் திட்டத்தின் பாதிப்பு பற்றிப் பேசினாலே அவர்களைக் கைது செய்தும் வருவதைப் பார்க்கும்போது, வெள்ளையரின் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில்தான் நாம் வாழ்கிறோமா என்ற ஆழமான சந்தேகமே ஏற்படுகிறது. மிகவும் ஆபத்தான இந்த நிலைமையை இனியும் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்காது.இது தவிர, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நூறுநாட்கள்வரை அமைதியாக ஜனநாயக வழியில் போராடிய பொதுமக்களை வேட்டையாடும் நடவடிக்கையை இன்னும் காவல்துறை அங்கே கைவிடாமல் அரங்கேற்றிவருகிறது. இரவில் வீடு புகுந்து பெண்களை மிரட்டி ஆண்களைக் கைது செய்கிறார்கள். சில கிராமங்களில் ஆண்களே வீடுகளில் தங்கமுடியாமல் அகதிகளைப்போல ஓடி ஒளிந்து கொள்ளும் பரிதாபகரமான  நிலையை காவல்துறை உருவாக்கியிருக்கிறது.

 

வீடுகளில் தங்கினால் ஏற்படும் மோசமான விளைவுகளை எண்ணிப்பார்த்து கோயில்களிலும், தேவாலயங்களிலும் அப்பாவி மக்கள் தங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை காவல்துறை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கூட ஆலையைலிருந்து கந்தக அமிலம் கசிவு ஏற்பட்டு மக்கள் அங்கும் அச்சத்தில் இருக்கின்ற நிலையில், தனியார் ஆலையை எப்படியும் பாதுகாக்கும் போக்கிலிருந்து இன்னும் அதிமுக அரசு மீளாமல், "காயங்களை நியாயப் படுத்துவதிலும், நியாயங்களைக் காயப்படுத்துவதிலும்" தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.சேலம் பசுமை சாலைத் திட்டமாக இருந்தாலும், ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினையாக இருந்தாலும் தனியாரின் நெருப்பு வளையத்திற்குள் சிக்கிக் கொண்டிருக்கும் அதிமுக அரசு,காவல்துறையை கண் மூடித்தனமாகப் பயன்படுத்தி கைது- அச்ச உணர்வைப் பரப்புதல்-பீதியை ஏற்படுத்துதல்-போன்ற ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

 

ஆகவே சேலம் எட்டு வழிப் பசுமை சாலைத் திட்டத்தில் மக்கள் கருத்தை அவசரமின்றி பொறுமையாகவும் முழுமையாகவும் கேட்டறிய வேண்டும். அந்த கருத்துக் கணிப்பில் மக்களில் எந்தப் பிரிவினரும்  சுதந்திரமாக எதிர்க் கருத்துகள் தெரிவித்து விடாமல் இருக்க, காவல்துறையை வைத்து மிரட்டுவதும், கைது செய்வதுமான அராஜகப் போக்கை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி உடனே தவிர்க்க வேண்டும். அதே போல் தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்பி விட்டது என்று செயற்கையாகக் கூறிக்கொண்டே, இன்னும் இரவு வேளைகளில் அத்துமீறி வீடு புகுந்து கைது செய்யும் சர்வாதிகார சாகசத்தை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். சேலம் உள்ளிட்ட பசுமை சாலைத்திட்டம்  நிறைவேற்றப்பட நினைத்துள்ள மாவட்டங்களிலும், தூத்துக்குடியிலும் காவல்துறை மூலம் மக்களையும், விவசாயிகளையும், தாய்மார்களையும் மிரட்டி, ஜனநாயகத்தைப் பலியிட்டு இட்லர்பாணி பயங்கரத்திற்கு உயிரூட்ட முயற்சித்திடும் நிலை, பல எச்சரிக்கைகளுக்குப் பிறகு இனியும் தொடர்ந்தால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்ட மக்களையும், விவசாயிகளையும், தாய்மார்களையும் திரட்டி ஒருங்கிணைத்து,அமைதியாக அறவழியில்,மாபெரும் வெகுமக்கள் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்!’’
 

சார்ந்த செய்திகள்