Skip to main content

கைதிகளை 'தொட' தயங்கும் போலீஸ்! காரணம் கரோனாதான்! 

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

Police hesitant to 'touch' prisoners! Everything is corona panic !!


விசாரணையின்போது கைதிகளை 'அன்பாக' நாலு தட்டுத்தட்டுவது என்பது காவல்துறையில் எப்போதும் சகஜமானதுதான். இப்போதெல்லாம், போலீஸிடம்  சிக்கும் கைதிகள் சகட்டுமேனிக்கு கழிவறையில் 'வழுக்கி விழுந்து', கை, கால்களை உடைத்துக் கொள்வதும், அவர்களுக்குப் பரிவுடன் கட்டுப்போட்டு விடுவது வரையில் காவல்துறையினர் கனிவுடன் நடந்து கொள்கின்றனர். இவை எல்லாமே குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கும் மாற்று வழிகள்.
 


பல்வேறு குற்ற வழக்குகள் அல்லது சந்தேகத்தின்பேரில் விசாரிக்கும்போதும், வாக்குமூலம் எழுதி வாங்கும்போதும், கைகளுக்கு விலங்கிட்டு நீதிமன்றம், மருத்துவமனை, சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் செல்வது வரையிலும் அவர்களிடம் காவல்துறையினர் நெருங்கிச் செல்வது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், கரோனா நோய்த்தொற்று அபாயம் பெரும் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில், கைதிகளை முன்புபோல் நெருங்கிச் சென்று விசாரிப்பதைக் காவல்துறையினர் தவிர்த்து வருகின்றனர்.
 

Police hesitant to 'touch' prisoners! Everything is corona panic !!


ஒருவேளை, லட்டி எடுத்தால்தான் குற்றவாளிகள் பேசுவார்கள் என்ற சூழலிலும்கூட, இப்போதெல்லாம் வழக்கத்தை விட நீளமான லட்டியால் லேசான ரெண்டு தட்டு தட்டுகிறோம் என்கிறார்கள் சேலம் மாநகர காவல்துறையினர்.

சேலத்தில், பெண்களை ஆபாசப்படம் எடுத்து, பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக தாதகாப்பட்டியைச் சேர்ந்த லோகநாதன் (35), அவருடைய கூட்டாளிகள் சிவா (36), பிரதீப் (28) ஆகிய மூவரை சேலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கடந்த 15 நாள்களுக்கு முன்பு கைது செய்தனர். இவர்களில் முக்கிய குற்றவாளியான லோகநாதனுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர்களைக் கைது செய்வது மற்றும் விசாரணையில் முக்கியப் பங்காற்றிய உதவி ஆணையர் ஈஸ்வரன், சேலம் நகர காவல் ஆய்வாளர் குமார், மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் காவலர்கள் உள்பட 50 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யும் நிலை ஏற்பட்டது. மகளிர் காவல்நிலையமும் இழுத்து மூடப்பட்டது. இதில், குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச்சென்ற அன்னதானப்பட்டி காவலர் ஒருவருக்கும் குற்றவாளிகளிடம் இருந்து நோய்த்தொற்று ஏற்பட்டது மாநகர காவல்துறையினரை பெரும் பீதி அடைய வைத்தது.
 


இச்சம்பவத்திற்கு முன்பே, இரும்பாலை காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்த கைதி ஒருவருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால், அந்தக் காவல்நிலையமும் மூடப்பட்டது. இதையடுத்து, திறந்தவெளியில் சாமியானா பந்தல் அமைத்து மக்களிடம் புகார் மனுக்களைப் பெற்று வந்தனர்.

வேறு சில மாவட்டங்களிலும் குற்ற வழக்குகளில் கைதான சிலருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் காவல்துறையினர், எக்காரணம் கொண்டு இனி கைதிகளை நெருக்கமாகச் சென்று விசாரிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். குறிப்பாக, கைகளால் அடிப்பதையே நிறுத்தி விட்டோம் என்கிறார் ஒரு காவல் ஆய்வாளர்.
 

Police hesitant to 'touch' prisoners! Everything is corona panic !!


இது தொடர்பாக சேலம் மாநகர காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ''ஊரடங்கு விதிகள் கடுமையாக இருந்தபோது மாநகரில் குற்றங்களும் கட்டுக்குள் இருந்தது. அதன்பிறகு படிப்படியாக ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டது, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதை நாங்களும் மறுக்கவில்லை.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எந்த ஒரு குற்ற வழக்குகளிலும் கைதிகளிடம் அன்பாக விசாரித்தால் பத்து சதவீத உண்மையைக் கூட எங்களால் பெற முடியாது. அதனால், சில நேரங்களில் அவர்கள் மீது கை வைக்க வேண்டியதாகி விடுகிறது. சமீபத்தில், சேலத்தில் அழகுநிலையம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த நபரை கைது செய்து மூன்று நாள்களாக கஸ்டடியில் வைத்து விசாரித்தோம். அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது, சிறையில் அடைக்கப்படும் போதுதான் தெரிய வந்தது. அந்தக் கைதி மூலமாக எங்களில் ஒருவருக்கு நோய்த்தொற்று வந்துவிட்டது.
 

http://onelink.to/nknapp


அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கைதிகளைக் கைகளால் தொட்டு விசாரிப்பதையும், நெருங்கிச் சென்று விசாரிப்பதையும் தவிர்த்து வருகிறோம். பொதுமக்கள் கூட்டமாக வந்து புகார் மனு கொடுப்பதையும் தவிர்க்கச் சொல்கிறோம். காவல்துறையினருக்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றனர்.

போலீசாரையும் அலற விட்டிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ்.
 

சார்ந்த செய்திகள்