/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_220.jpg)
சென்னையைச் சேர்ந்த வாலிபரை, அரக்கோணத்தில் வைத்து தீர்த்துக்கட்டிய கும்பலைச் சேர்ந்த இரு வாலிபர்களை, சேலம் வழியாக ரயிலில் தப்பிச்சென்றபோது காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (26). இவர், கடந்த ஒரு மாதமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஏபிஎம் கிறித்தவ தேவாலயம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். ஆகஸ்ட் 6ம் தேதி இரவு பிராங்களின், அரக்கோணம் ரயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், திடீரென்று பிராங்க்ளினை சுற்றிவளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்றபோது, அந்த கும்பல் விடாமல் அவரை துரத்திச்சென்று வெட்டியது. பலத்த காயம் அடைந்த பிராங்க்ளின் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். ஆட்கள் திரண்டு வந்ததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் காவல்நிலைய காவல்துறையினர் பிராங்களினை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் தன்பாத் ரயிலில் சேலம் வழியாக தப்பிச்செல்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து சேலம் ரயில்நிலைய காவல்துறைக்கு தகவல் அளித்து, உஷார்படுத்தப்பட்டனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் ஆக. 9ம் தேதி அதிகாலை சேலம் வந்த தன்பாத் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது, முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்து இருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில், அவர்களில் ஒருவர், சென்னை செங்குன்றம் பவானி நகரைச் சேர்ந்த லோகேஷ்வரன் (28), மற்றொருவர், சென்னை மணலியைச் சேர்ந்த கார்த்தி (28) என்பதும் தெரிய வந்தது. அரக்கோணத்தில் பிராங்க்ளின் கொலையில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து அவர்கள் இருவரையும் சேலம் ரயில்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து அரக்கோணம் காவல்துறைக்கு தகவல் அளித்து வரவழைத்தனர். பின்னர் அவர்களிடம், பிடிபட்ட இருவரையும் ஒப்படைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)