police gave flowers motorists who followed signal night time

இரவில் கூட சிக்னலை பார்த்து மதித்துச் செல்லும் வாகன ஓட்டிகளைப் பார்த்து குஷியான போலீசார், அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை மாவட்டம் முழுவதும் தற்போது வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால், எப்போதும் டிராபிக்கில் வாகனங்கள் தேங்கி நிற்க வேண்டிய சூழலும் உருவாகிறது. இது போலீசாருக்கு மிகுந்த தலைவலியைக் கொடுக்கிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்துக் காவலர்கள் இருக்கிற நிலையில், மீதமுள்ள இடங்களில் சிக்னல் மூலம் போக்குவரத்து நெறிப்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

அதே சமயம், சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்துக் காவலர்கள் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். மாநகரப் பகுதியில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சிக்னல்கள் இயங்குவது வாடிக்கை. ஆனாலும் போலீசார் யாரேனும் நிற்கிறார்களா எனப் பார்க்கும் வாகன ஓட்டிகள், அவர்கள் இல்லை எனத்தெரிந்த மறு நிமிடமே, ஆக்சிலரேட்டரை முறுக்கி மாயமாகி விடுகின்றனர். இதையறிந்துதான், தற்போது ஆட்டோ சென்சார் மூலம், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது ஃபைன் அடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு ஒரு மணி வரை அவினாசி சாலையிலுள்ள சிக்னல்கள் இயங்கப்பட்டன. இரு சக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள், சிக்னல்களில் தங்களது வாகனத்தை நிறுத்தி, பச்சை விளக்கு வந்தவுடன் கடந்து சென்றனர். இதைப் பார்த்து வியப்படைந்த போலீசார், பகல் நேரங்களில் கூட சிலர் மதிக்காமல் போகும்போது, இவர்கள் நள்ளிரவிலும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுகிறார்களே என ஆச்சரியப்பட்டு போனார்கள். அத்துடன் அவர்களைப் பாராட்ட வேண்டும் எனும் நோக்கில், அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்தினர்.