
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
முதலில் காவல்துறை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. மொத்தமாக 300க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களும், 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும், 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பரிசோதனைகளும், அறிவியல் பூர்வமான முறையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு நேற்று (24/01/2025) இதில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தது. முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் மூன்று பேர் மீது புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முட்டுக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் 750 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த வேங்கை வயல் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து வேங்கைவயல் சம்பவம் தொடர்பான வீடியோ, ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் இளைஞர்கள் பாலிதீன் கவரில் மனிதக் கழிவுகளை கொண்டு வந்து நீர்தேக்க தொட்டியில் சிரித்து பேசிக்கொண்டே அச்செயலில் மிகவும் சாதாரணமாக ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வேங்கை வயலை சுற்றி உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். விசிகவினர் சிபிஐ விசாரணை வேண்டும் என போராட்டங்களில் ஈடுபடலாம் என்பதன் அடிப்படையில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி உள்ளே நுழைந்த விசிகவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் புதுக்கோட்டை வேங்கை வயலில் தனிப்பட்ட விரோதத்தால் மூன்று பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே வேங்கை வயல் தொடர்பான தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.