Skip to main content

ரயில்வே பாலத்தின் அடியில் சடலமாகக் கிடந்த பெண் யார்? பரபரப்பு தகவல்கள் அம்பலம்!

Published on 19/07/2022 | Edited on 19/07/2022

 

Police found passed away woman in salem and identified

 

சேலம் அருகே, ரயில்வே மேம்பாலத்தின் அடியில் சடலமாகக் கைப்பற்றப்பட்ட பெண் யார் என்று முழு விவரமும் தெரியவந்துள்ளது.

 

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகர் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் ஜூலை 17ம் தேதி காலையில் ஒரு பெண்ணின் சடலத்தை தீவட்டிப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தப் பெண்ணின் கழுத்தில் ஒரு தங்க சங்கிலி இருந்தது. வயிற்றுப் பகுதியில் லேசான ரத்தக்காயம் இருந்தது. இடக்கையில் மணிமலர் என்று பச்சை குத்தி இருந்தார். 

 

தீவட்டிப்பட்டி, ஓமலூர், காடையாம்பட்டி, தர்மபுரி மாவட்டத்தில் அண்மையில் காணாமல் போன பெண்களின் பட்டியல் சேகரித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், இறந்து கிடந்த பெண்ணின் பெயர் மலர்விழி (60) என்பதும், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கடத்தூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மலர்விழியின் கணவர், மணி. அவர் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், மூன்று ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதும் தெரியவந்தது. 

 

இதையடுத்து மலர்விழி, தன் மகன் வேலவனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். மகன், உள்ளூரிலேயே ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். கணவர் பெயரையும் தன் பெயரின் ஒரு பகுதியையும் அவர் கையில் பச்சை குத்தியிருந்துள்ளார். கணவர் ஓய்வு பெற்றபோது கிடைத்த செட்டில்மெண்ட் தொகையைக் கொண்டு மலர்விழி, வட்டித்தொழில் செய்து வந்தார். அதனால் பணம் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை யாராவது கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

 

மேலும், அவரை மர்ம நபர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் கொலை செய்துவிட்டு, சடலத்தை ராமமூர்த்தி நகர் ரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

 

இதற்கிடையே, மலர்விழியின் சடலம், சேலம் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூலை 18) உடற்கூராய்வு செய்யப்பட்டது. சடலம் கைப்பற்றப்பட்ட இடம், அவருடைய வீடு அமைந்துள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டும், மலர்விழியின் செல்போனில் பதிவாகியுள்ள அழைப்பு விவரங்களின் அடிப்படையிலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 


இன்னும் ஓரிரு நாளில் குற்றவாளியை காவல்துறையினர் நெருங்கி விடுவார்கள் எனத் தெரிகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்