
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பறக்கும்படை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழு சமயபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி ஆவணங்களை சரி பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது குஜராத் மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி சுற்றுலா பேருந்து 40 பயணிகளுடன் திருச்சி வழியாக ராமேஸ்வரத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அந்த ஆம்னி பேருந்தை பறக்கும் படை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டு ஆவணங்களை சரிபார்த்தபோது மாநில நுழைவு வரி செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 40 பயணிகளுடன் பேருந்து சிறைப்பிடிக்கப்பட்டு திருச்சியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு 40 ஆயிரத்து 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் உடனடியாக உரிய தொகையை செலுத்த முடியவில்லை அதனால் இரவு முழுதும் சுற்றுலா வந்த குஜராத் பயணிகள் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திலேயே தங்கியிருந்தனர். பெண்கள் அதிகம் என்பதால் உடனடியாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் ஆன்லைன் மூலம் அபராதத் தொகை 40 ஆயிரத்து 50 செலுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு அந்த தனியார் ஆம்னி பேருந்து விடுவிக்கப்பட்டு ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றது.