/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kallakurichi-in_1.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அருகில் உள்ளது ஊத்தோடைக்காடு. இப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்து அறநிலைத்துறை கோவிலுக்குக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார். சமீபத்தில் அந்த நிலத்தை வேறு ஒரு நபர் குத்தகைக்கு ஏலம் எடுத்ததாக தெரியவருகிறது. இந்தச் சூழ்நிலையில் ஏற்கனவே விவசாயம் செய்துவரும் விஜயகுமாருக்கும் சமீபத்தில் குத்தகை எடுத்தவருக்கும் நிலத்தை சொந்தம் கொண்டாடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் விஜயகுமார், பயிர் செய்திருந்த மரவள்ளி செடிகளை சமீபத்தில் குத்தகைக்கு எடுத்த நபர் அழித்துள்ளதாக கூறி விஜயகுமார் கச்சராபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றுகூறி விஜயகுமாருக்கு ஆதரவாக கிஸான் விவசாய சங்கத்தைசேர்ந்த சுமார் 50 பேர் நேற்று காலை கச்சராபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முறையான விசாரணை நடத்தப்படும் என்று கூறி விவசாயிகளை கலைந்து செல்ல வைத்தனர். மேலும் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இப்படி கூட்டமாக கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட வந்தது சட்டப்படி தவறு என்று கூறி முற்றுகையிட்ட கிஸான் விவசாய சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)