/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1197.jpg)
கடந்த 20ஆம் தேதி காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மர்ம நபர்கள் சிலர், அதன் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அந்த சம்பவம் குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தந்தனர்.
சின்ன சேலம் அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்தவர் வடக்கநந்தல் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ். இவர், சம்பவத்தன்று காலை பங்கில் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது பங்கில் அவர் மட்டுமே இருந்ததை அறிந்துகொண்டு, அங்கு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் தனியாக இருந்த பிரகாஷ்ராஜிடம் தங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் போடும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து பிரகாஷ்ராஜ் அவர்களது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத நிலையில், அந்த மர்ம நபரில் ஒருவர் ஹெல்மெட்டால் பிரகாஷ்ராஜ் தலையில் பலமாக அடித்துள்ளார். அதில் பிரகாஷ்ராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் வைத்திருந்த கலெக்சன் பணப் பையை அம்மர்ம நபர்கள் பிடுங்கிக்கொண்டு தப்பியுள்ளனர்.
தாக்கப்பட்ட பிரகாஷ்ராஜ் சுதாரித்து எழுந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராஜலட்சுமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து பிரகாஷ்ராஜ் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் சின்னசேலம் அருகே உள்ள கணியமூர் கூட்டு சாலையில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, தனித்தனி வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முகமது ரஷீத், தியாகதுருகம் அடுத்த பிரிதிவி, மங்கலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், கள்ளக்குறிச்சியை சேர்ந்த நித்திஷ் குமார் என்பது தெரியவந்தது.
இவர்கள் மூவரும்தான், சின்னசேலம் பெட்ரோல் பங்கில், ஊழியர் பிரகாஷ்ராஜை தாக்கிக் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், போலீசார் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் இவர்கள் மூவரும் கள்ளக்குறிச்சி கவரை தெருவில் கடந்த 25ஆம் தேதி அவ்வழியே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டரை பவுன் தங்க செயினையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 10 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் பாராட்டியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)